

ஐநா பொதுச்சபையில் இம்ரான் கான் பேசியதற்கு ஹர்பஜன் சிங் தன் கண்டனங்களை தெரிவித்ததிலிருந்து பின் வாங்குவதாக இல்லை.
பாகிஸ்தான் நடிகை ஜகீதா மாலிக் என்ற வீணா மாலிக், இம்ரான் கான் பேச்சை ஹர்பஜன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, ஹர்பஜன் உங்களுக்கு ஆங்கிலம் புரியாதா என்று கேலி பேச ‘நீங்கள் உங்கள் ஆங்கிலத்தைச் சரி செய்யுங்கள்’ என்று ஹர்பஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
“இம்ரான் கான் உரையில் இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். ஒரு விளையாட்டு வீரர் என்ற வகையில் இம்ரான் கான் ‘ரத்தக்களறி’ என்ற சொல்லையும் ‘இறுதி வரை போராடுவோம்’ என்ற சொல்லையும் அரசியலில் பயன்படுத்துவது இருநாடுகளுகும் இடையே பகைமையையே வளர்க்கும், ஒரு சக விளையாட்டு வீரராக அவர் அமைதியைப் பரப்ப வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தன் ட்விட்டரில், “பிரதமர் இம்ரான் தன் உரையில் அமைதி குறித்து பேசினார். ஊரடங்கு உத்தரவு அகற்றப்பட்ட பிறகு உறுதியாக ரத்தக்களறி ஏற்படும் என்று பேசி அதன் பிறகான எதார்த்தம் மற்றும் பயங்கரம் பற்றியே இம்ரான் கூறினார், தெளிவாக அவர் இது ஒரு பயம் தரும் சூழல் என்றாரே தவிர அச்சுறுத்தும் விதமாக கூறவில்லை. உங்களுக்கு ஆங்கிலம் புரியாதா ஹர்பஜன்” என்று கேட்டுள்ளார்.
இந்த ட்வீட்டின் ஆங்கிலத்தில் surely என்பதற்குப் பதிலாக surly என்று வீணா மாலிக் குறிப்பிட்டதை கேலி செய்து ஹர்பஜன் சிங் ட்வீட் செய்கையில், ‘surly என்றால் என்ன பொருள்? ஓ அது surely-யா? ஆங்கிலத்தில் ஒன்றை வெளியிடும் முன் நன்றாக வாசிக்கவும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது..