Published : 08 Oct 2019 11:53 AM
Last Updated : 08 Oct 2019 11:53 AM

கும்பல் கொலை மேற்கத்திய வார்த்தை; இந்தியாவை அவமானப்படுத்தாதீர்கள்: மோகன் பாகவத் வேண்டுகோள்

நாக்பூர்

கும்பல் கொலை (lynching) என்பது மேற்கத்திய வார்த்தை. இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அதன் தலைமையகம் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் அழைக்கப்பட்டு இருந்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் பட்நாவிஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

''லிஞ்சிங் எனும் (கும்பல் கொலை) வார்த்தை இந்தியாவின் பூர்வீகமான வார்த்தை இல்லை. ஆனால், ஒரு மதத்தோடு தொடர்புடைய வார்த்தையை, இந்தியர்கள் மீது ஒருபோதும் சுமத்தக்கூடாது. இந்தியர்கள் சகோதரத்துவத்தில் அதிகமான நம்பிக்கையுள்ளவர்கள்.

லிஞ்சிங் என்பது மேற்கத்திய வார்த்தை. இந்தியாவை அவமானப்படுத்தும் வார்த்தை. ஒருபோதும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. மக்கள் அனைவரும் தங்களுக்கு இடையே ஒருமைப்பாட்டை உருவாக்கி, சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, பாரத் எனும் சிந்தனையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகிறார்கள்.

உலகின் பல நாடுகளில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பாரதத்தைப் பெருமைப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள சில சக்திகள் இந்தியா வலிமையாகவும், சக்தியுள்ளதாகவும் வருவதற்கு விரும்புவதில்லை.

2019-ம் ஆண்டு தேர்தல் மிகவும் வெற்றிகரமாக நடந்தது குறித்து அறிந்துகொள்ள இந்த உலகம் ஆர்வமாக இருக்கிறது. எந்த நாட்டிலிருந்தும் ஜனநாயகம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. நூற்றாண்டுகளாக இங்கு ஜனநாயகம் பின்பற்றப்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் எல்லைப் பகுதி இப்போது பாதுகாப்பாக இருந்து வருகிறது. கடற்பகுதி பாதுகாப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நிலப்பகுதி எல்லைகளில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், சோதனைச் சாவடிகள், கடற்பகுதியில் கண்காணிப்புகள், குறிப்பாக தீவுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் பொருளாதாரச் சுணக்கம் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் இருந்து நாடு விடுபட அரசு கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் தொழில் முனைவோர் சமுதாயம், சவால்களை விரைவில் தோற்கடிப்போம்''.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x