54 நாட்களில் 6 கோடி; பாஜகவில் மொத்தம் 17.50 கோடி உறுப்பினர்கள்: ஜே.பி.நட்டா பெருமிதம்

பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா : கோப்புப்படம்
பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா : கோப்புப்படம்
Updated on
1 min read

பிலாஸ்பூர்

கடந்த 54 நாட்களில் பாஜகவில் 6 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பாஜகவின் உறுப்பினர்கள் பலம் 17.50 கோடி. வலிமையான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி. நட்டா பாஜக செயல் தலைவர் ஆனபின், முதல் முறையாக தன் சொந்த மாநிலத்துக்குச் சென்றார்.

பிலாஸ்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டிலேயே வலிமையான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜகவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 17.50 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 54 நாட்களில் மட்டும் புதிதாக 6 கோடி உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்கள். ஜூன், ஜூலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதில் இருந்து 54 நாட்களில் 11 கோடி இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 17.50 கோடியாக அதிகரித்துள்ளது

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டும், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தும் ஏராளமானோர் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கிய பின்பும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பாஜகவால் தொடர்ந்து வெற்றிகரமாக அரசியலில் பயணிப்பது எவ்வாறு என காங்கிரஸ் கட்சி வியப்பாக பார்க்கிறது. காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்படுவதற்குமுன் ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் ஏதும் அந்த மாநிலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை.

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் பிரதமர்களாக ஆகி இருக்கிறார்கள், அவர்களுக்கு அரசியலமைப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங், ஐ.கே. குஜரால் பிரதமர்களாகவும், மேற்கு பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட மூத்த தலைவர் எல்கே அத்வானி துணைப் பிரதமரும் ஆகியுள்ளார்.

ஆனால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வந்து ஜம்மு காஷ்மீரில் தங்கியவர்களால், 370-வது பிரிவை நீக்காதவரை கவுன்சிலர்களாகக் கூட முடியாது. தலித்துகள், பழங்குடி மக்கள் ஆகியோருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு இல்லை. அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை. இவை அனைத்தும 370-வது பிரிவும், 35ஏ பிரிவும் அங்கு நடைமுறையில் இருந்ததால்தான்.

ஆனால், 370-வது பிரிவு நீக்கப்பட்டபின், காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி மாநிலம் செல்கிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 46 லட்சம் மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள், ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது''.

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in