Published : 08 Oct 2019 10:25 AM
Last Updated : 08 Oct 2019 10:25 AM

இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: ராகுலின் கம்போடியா பயணம் காங்கிரஸுக்கு சொல்லும் செய்தி என்ன?

புதுடெல்லி

ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய இரு முக்கிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் திடீர் கம்போடியா பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அமைதியற்ற சூழல், குழப்பமான சூழல் ஆகியவற்றைச் சமாளிக்கும் நோக்கில் ஆழ்நிலை தியானப் பயிற்சிக்காக கம்போடியாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், கட்சியின் முக்கியப் பொறுப்பிலும் நட்சத்திர பிரச்சாரப் பட்டியலில் இருப்பவர் ராகுல் காந்தி. இரு மாநிலத் தேர்தல் நடக்கும் தருவாயில் திடீரென ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகளே பயணத்துக்கான காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதாவது, ராகுல் காந்தியின் நெருக்கமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதும், அல்லது மூத்த தலைவர்கள் மீது குற்றம் சாட்டும் சம்பவங்கள் போன்றவற்றாலும், மனம் வெறுத்து தனது அதிருப்தியைத்தான் ராகுல் காந்தி இப்படி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் உணர்த்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

ராகுல் காந்தி தனது தனிப்பட்ட பயணத்துக்காகத்தான் சென்றுள்ளார். இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்வார் என்று காங்கிரஸ், கட்சித் தொண்டர்களுக்கு விளக்கம் அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளது

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், அதன்பின் கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய தேர்தலில் ராகுல் காந்தி தன்னை முன்னிறுத்தி ஆர்வமாக, மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ராகுல் காந்தியின் பேச்சு கவனிக்கப்பட்டது, ஈர்க்கப்பட்டது. அதுபோல் மகாராஷ்டிரா, ஹரியாணாவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுவது கடினம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியிலும், தேசிய அரசியலிலும் இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன. முதலாவது, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வாறு தோல்வி ஏற்பட்டால் அதற்கு காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்ல ராகுல் காந்தி விரும்பமாட்டார்.

2-வதாக காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியை ஆக்கிரமித்துள்ள மிக வயதான தலைவர்கள் காரணம் என்ற ரீதியில் அவர்களைத் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலக ராகுல் வலியுறுத்தலாம். இந்த இரு விஷயங்கள் நடக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி ஆகஸ்ட் 10-ம் தேதி பதவி ஏற்றபின், ஏராளமான இளம் தலைவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா மாநிலத்தின் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வர் சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

அவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ஒருமுக்கியமான விஷயத்தை உணர்த்தியுள்ளார். அதில் " கடந்த சில ஆண்டுகளாக, ராகுல் காந்தியால் உருவாக்கப்பட்ட இளம் தலைவர்களைக் கட்சியில் இருந்து ஓரம் கட்டவும், ஒழிக்கவும் ஏராளமான சதித்திட்டங்கள் நடக்கின்றன. இந்த சதித்திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எளிதாக எதிர்த்து நிற்க முடியவில்லை. இதைச் சொல்ல வேண்டியதும் எதிர்க்க வேண்டியதும், வெளிப்படுத்த வேண்டியதும் என்னுடைய பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய் குமார், திரிபுரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரயோத் தேவ் புர்மான் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மூத்த தலைவர்கள் மீதுதான் குற்றம் சாட்டினார்கள். பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆதிக்கத்தால் ஒதுங்கினார்.

ஆதலால், காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களைத் தலையெடுக்க விடாமல் மூத்த தலைவர்களும், வயதான தலைவர்களும் தொடர்ந்து நடத்தும் ஆதிக்கத்தைக் குறைக்க ராகுல் காந்தி காய்களை நகர்த்துகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வைக்கப்படுகிறது

போத்திராஜ்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x