

புதுடெல்லி
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வகை செய்யம் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பபட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியரை திருமணம் செய்த பெண் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேறு ஒருவருடன் நடந்த திருமணத்தை மறைத்து தன்மை திருமணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர் கொடுமை படுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் தொடர்பாக மூன்று ஆண்டுகளில் 4300 புகார்கள் வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகமும் வெளியிட்டிருந்தது.
இதனால் மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருமணங்களின் மூலம் மோசடிகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களை ஒழுங்குமுறைப்படுத்த தற்போதைய சட்டங்கள், விதிகள், கொள்கைகள் ஆகியவற்றில் திருத்தம் செய்வது குறித்து ஆராய பஞ்சாபில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பஞ்சாப் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான அரவிந்த் குமார் கோயல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அளித்த பரிந்துரையுடன், பொதுமக்கள், பெண்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள் அளித்த கருத்துக்களையும் சேர்த்து மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண மோசடிகளை தடுக்கும் புதிய மசோதா உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்யவேண்டும். 30 நாட்களுக்குள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் திருமணத்தை பதிவுசெய்யாவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும்.
நீதிமன்றமங்கள் இந்திய வெளியுறவுத் துறையின் இணையதளத்தின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம். வெளிநாடுவாழ் இந்தியர் நீதிமன்ற சம்மனுக்கு ஆஜாராகவில்லை என்றால் அவரது சொத்துகளையும் முடக்கலாம்.
நீதிமன்றம் ஆஜராகவில்லை என்றால் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியும்.
இந்த மசோதா தொடர்பாக பல்வேறு கட்சிகளும் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்தன. எம்.பி.க்கள் பலர் இதனை வெளியுறவு அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர். இதன்படி இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்படுவதாகவும், அக்குழு இரண்டு மாதங்களுக்குள் ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்கும் எனவும் மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.