போலீஸார், அரசியல் தலைவர்களுக்கு குறி: 3 தீவிரவாதக் குழுக்களுக்கு பொறுப்பு கொடுத்த பாகிஸ்தான்: உளவுத்துறை எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

காஷ்மீர் முதல் நாட்டின் பல்வேறு நகரங்களிலும், போலீஸார், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தவும், மக்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை உருவாக்கவும், 3 தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் ஆதரவுடன் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியுள்ளன.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "புல்வாமா மாவட்டத்தில் ரகசியமான ஒரு இடத்தில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து தங்களின் எதிர்காலத் திட்டங்கள், தாக்குதல்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, இந்த தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானின் ஆதரவோடு இயங்குகின்றன. இந்த தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்துள்ளது. அதில் அரசியல் கட்சித் தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துதல், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தாக்குதல்களை நடத்துதல், உயர் போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு, தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தவும், லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்புக்கு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு இடங்கள், உயர் போலீஸ்அதிகாரிகள் ஆகியோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, அவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்ய ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால், உளவுத்துறையுடன் உள்ளூர் போலீஸார், ராணுவம், பாதுகாப்புப் படையினர் எப்போதும் தொடர்பில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in