

அகர்தலா
திரிபுரா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி கோயிலில் ஆடுவெட்ட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் 500 ஆண்டுகளில் முதன்முறையாக ஆடு பலியிடாமல் அங்கு துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது.
திரிபுராவில் உள்ள கோம்தி மாவட்டத்தில் உள்ள உதய்பூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்திர அம்மன் கோயில் உள்ளது. நாடுமுழுவதும் உள்ள 51 சக்தி பீடங்களில் இந்த கோயிலும் ஒன்று. கடந்த 1501-ம் ஆண்டு திரிபுரா அரசர் தான்ய மானிக்யா பகதூர் இந்த கோயிலை கட்டினார். இந்த கோயில் ஆதிசக்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு ஆடுவெட்டி வழிபாடு நடத்தவது வழக்கம்.
இந்த நிலையில் துர்கா பூஜையின்போது அம்மன் கோயிலில்களில் ஆடு வெட்ட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. மிக கொடூரமான முறையில் விலங்கினங்கள் கொல்லப்படுவதாக கூறி முன்னாள் நீதிபதி சுபாஷ் சந்தி சட்டர்ஜி இந்த வழக்கை தொடுத்தார்.
ஆடுகள் வெட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து நவராத்திரியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆடுகள் வெட்ட அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. எனினும் இந்த வழக்கில் நவராத்திரியில் ஆடுகள் வெட்ட அம்மாநில உயர் நீதமின்றம் தடை விதித்தது.
ஆடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு கோயில் பூசாரிகள், பக்தர்கள் என பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த அதற்கான கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு ஆடுகள் வெட்டாமலேயே நவராத்தி கொண்டாடப்படுகிறது. நாளை துர்கா பூஜையிலும் ஆடுகள் வெட்டப்பட வாய்ப்பில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.