

புனே
கால்சியத்தை செலுத்தினாலும் காங்கிரஸை எழுச்சியடைய வைக்க முடியாது என அசாதுதீன் ஒவைசி பேசினார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதுபோலவே ஹரியாணாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த இரு மாநிலங்களிலும் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவை த் தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைபற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் இவ்விரு கூட்டணியை தவிர பல்வேறு கட்சிகளும் இங்கு போட்டியிடுகின்றன. இதில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் முக்கியமானது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி கலந்து கொண்டு தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘காங்கிரஸ் கட்சி இன்று மிகவும் பலவீனமடைந்து விட்டது. உலகம் ஒப்புக்கொண்ட மிகச்சிறந்த கால்சியத்தை கொடுத்து கூட அந்த கட்சி வலிமையை ஏற்படுத்த முடியாது.
அவர்கள் தறே்பாது வீழ்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றனர். அவர்களை யாராலும் எழுச்சியுற வைக்க முடியாது. எனெனில் அவர்கள் எந்த சண்டைக்கும் தயாராக இல்லை’’
இவ்வாறு ஒவைசி பேசினார்.