Published : 07 Oct 2019 12:08 PM
Last Updated : 07 Oct 2019 12:08 PM

சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் மகாராஷ்டிராவில் முதல்வராக வருவார்: உத்தவ் தாக்கரே உறுதி

சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்

மும்பை

சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் மகாராஷ்டிராவின் முதல்வராக வருவார் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியோடு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் வரும் 21-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்ட நிலையில் இந்த முறை இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

சிவசேனா 126 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு 14 இடங்களும், பாஜக 148 இடங்களிலும் போட்டியிடுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மும்பையின் வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனாவின் 50 ஆண்டுகால வரலாற்றில் தாக்கரே குடும்பத்தில் இருந்து நேரடித் தேர்தல் அரசியல் களத்தில் ஆதித்யா தாக்கரே வந்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா வில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த 2014-ம் ஆண்டில் தேசம் முழுவதும் மோடி அலை வீசியபோது, மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள்தான் மோடி அலையைத் தடுத்து நிறுத்தினோம். ஆனால், ஏன் பாஜகவுடன் பிரிவினை ஏற்பட்டு விலகிச் சென்றோம் என்பது குறித்து இந்த நேரத்தில் ஆலோசிக்கத் தேவையில்லை.

மகாராஷ்டிராவில் ஒருநாள் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவார். அதற்கான காலம் விரைவில் வரும். சிவசேனாவில் இருந்து ஒருவரை முதல்வராக்கிக் காட்டுவேன் என்று எனது தந்தை பால் தாக்கரேவிடம் உறுதிமொழி அளித்தேன். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எனது மகன் ஆதித்யா தாக்கரே இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்காக நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அர்த்தம் இல்லை. நான் எப்போதும் தீவிர அரசியலில்தான் இருப்பேன்.

தேசியவாதத் தலைவர் அஜித் பவார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது மகனை விவசாயம் செய்ய அறிவுறுத்தியதைப் போன்று, நான் விவசாயம் செய்யப் போவதில்லை. அரசியலில் மட்டுமே இருப்பேன்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே நடந்தது தேர்தல் போட்டி அல்ல, தேர்தல் போர். தேசிய அளவில் மோடி அலை வீசியபோதிலும், நாங்கள் மகாராஷ்டிராவில் தடுத்தோம். பாஜக ஆட்சியில் இருந்தாலும், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் செய்வோம்".

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x