Published : 07 Oct 2019 11:11 AM
Last Updated : 07 Oct 2019 11:11 AM

மும்பை ஆரே வனப்பகுதியில் இனி எந்த மரத்தையும் வெட்டக்கூடாது: தடை விதித்தது உச்ச நீதிமன்றம் 

உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

புதுடெல்லி

மும்பை ஆரே காலனியில் மரங்களை ஏதும் இனிமேல் வெட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆரே பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக குடியிருப்பு வாசிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரித்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.

மும்பை புறகநகரில் இருக்கும் ஆரே காலனி, ஏராளமான மரங்களைக் கொண்ட வனம் போன்ற பகுதியாகும். அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் 2 500-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவே தொடங்கி 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியது.

ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் காலனிக்குள் நுழைய முயன்ற தலித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாள்களில் கைது செய்யப்பட்ட 29 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயை நேற்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் சந்தித்து, ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தார். வரும் 12-ம் தேதி வரை தசரா, விடுமுறைக் காலம் என்பதால், சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

அப்போது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷன் பிறப்பித்த உத்தரவில், "ஆரே காலனியில் மரம் வெட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இனிமேல் எந்த மரங்களையும் வெட்டக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிடுகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுவரை விடுவிக்கப்படாதவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் மனுதாரராகச் சேர்க்க வேண்டும். வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x