

ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீரில் ஜெய்ஷ் -இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சே்ந்த முக்கிய தீவிரவாதி மெக்ஸின் மன்சூர் ஷெல்ஹா கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் ஒப்புதல் மூலம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது.
மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பகுதிகளாக பிரித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இதனால் காஷ்மீரில் கடந்த சில பல நாட்களாக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அங்கு தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்நாடு கூறி வருகிறது. அத்துடன் காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயற்சி எடுத்து வருகிறது.
இதுமட்டுமின்றி சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டி காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவும், காஷ்மீருக்குள் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி நாசவேலைகளில் ஈடுபடவும் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.
இதையடுத்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் பதில் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருிறது. இதுபோலவே உள்ளூரில் முக்கிய தீவிரவாதிகளை கைது செய்யும் பணியில் அம்மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவுடன் உள்ளூரில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக ஜெய்ஷ -இ முகமது அமைப்பு மூன்று தீவிரவாத தலைவர்கள் தலைமையில் நாச வேலைகளை செய்ய ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியானது .
இதைத்தொடர்ந்து பாரமுல்லாவில் போலீஸார் நடத்திய என் கவுன்டரில் முக்கிய தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். அப்போது மறைந்து இருந்த இரண்டு தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர். அவர்களில் ஒருவரை சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த ஜெய்ஷ் -இ முகமது இயக்கதைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான மெக்ஸின் மன்சூர் ஷெல்ஹாவை காஷ்மீர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஷ்மீரில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உருவாக்கிய மூன்று மிக முக்கிய தீவிரவாதிகளில் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பாரமுல்லா என் கவுன்டர் சம்பவத்தில் தப்பியோடியது மன்சூர் என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.