Published : 07 Oct 2019 07:54 AM
Last Updated : 07 Oct 2019 07:54 AM

ஆள்மாறாட்ட மோசடிகளைத் தடுக்க நீட் தேர்வுக்கு கட்டாயமாகிறது ஆதார்: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த பரிசீலனை

புதுடெல்லி

நடப்பு ஆண்டு நீட் தேர்வில் பல் வேறு ஆள்மாறாட்ட முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாய மாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மருத்துவக் கல்வி யில் சேர்வதற்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வினை (நீட்) மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக் கான நீட் தேர்வு, தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலந்தாய்வின் அடிப்படையில் பல்வேறு மருத் துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவன் உதித் சூர்யா, ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாக அக்கல்லூரி நிர்வாகத்துக்கு மின்னஞ்சலில் அண்மையில் கடிதம் வந்தது.

வெளிச்சத்துக்கு வந்த மோசடி

இதனைத் தொடர்ந்து, மாண வன் உதித் சூர்யாவிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண் டது. அதற்கு பிறகு, அவர் கல் லூரிக்கு வரவில்லை. இதை யடுத்து, அவர் மீதான புகார் தொடர் பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில், உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றது தெரியவந்தது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாண வன் உதித் சூர்யாவையும், அவரது தந்தையான மருத்துவர் வெங்கடேசனை யும் கைது செய்தனர். விசாரணையில், உதித் சூர்யாவின் பெயரில் வேறொரு வர் நீட் தேர்வு எழுதி மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் பூதாகர மாகிய நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் சான்றிதழ் மற்றும் விண்ணப்ப சரிபார்ப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இதில் மேலும் அதிர்ச்சி யாக, சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர்கள் இருவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் ஒருவரும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

என்டிஏ தீவிர ஆலோசனை

நீட் தேர்வில் நடைபெற்ற இந்த ஆள்மாறாட்ட மோசடிகளானது, அத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளதாக நாடு முழுவதி லும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இத்தகையை மோசடிகள், எதிர்காலத்தில் நிகழாதபடி தடுக்க என்டிஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வியாளர் களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக என்டிஏ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், நீட் தேர்வுகளில் மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் என்டிஏ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு முதலாக நடத்தப்படும் நீட் தேர்வு களுக்கு ஆதாரை கட்டாயமாக்கு வது குறித்து என்டிஏ பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசிடம் கோரிக்கை

இதனிடையே, இதுதொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக, ஆதாரை பயன்படுத்து வதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் என்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து என்டிஏ இயக்குநர் வினித் ஜோஷி கூறியதாவது:

நடப்பு ஆண்டு நீட் தேர்வில் இது போன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் நடைபெறும் என நாங்கள் சிறி தும் எதிர்பார்க்கவில்லை. மாணவர் கள் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க வேண்டும் என்பதே எங்களின் பிரதான குறிக்கோளாக இருந்தது. இதன் காரணமாகவே, தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர் களிடம் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், தற்போது நடை பெற்றிருக்கும் மோசடிகள் எங் களுக்கு படிப்பினையை கொடுத் துள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதலாக, நீட் தேர்வுகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்திருக்கிறோம். அதே சமயத்தில், அவை மாணவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக, நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதற்காக, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் மாணவர்களின் கைரேகைகளும், கருவிழிப் படலங்களும் பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ளப் படும்.

அதன் பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையின்போது, மத்திய அரசிடம் இருந்து பெறப் பட்ட ஆதார் பயோ-மெட்ரிக் தகவல் களைக் கொண்டு, அவை சரி பார்க்கப்படும். இதன் மூலமாக, நீட் தேர்வில் எந்த வகையான மோசடி யும் நடைபெற வாய்ப்பில்லை. தற்போது வரை, நீட் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பும், அதற்கு பின்னரும் மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்து வந்துள்ளோம். எனினும், அவை யாவும், பயோ-மெட்ரிக் முறையில் அல்லாமல் தாள்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதனால், சரிபார்ப்பு நடவடிக்கை களில் அவற்றை பயன்படுத்துவது சற்று கடினமானதாக இருந்தது. இந்நிலையில், ஆதார் தகவல் களை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரி மத்திய அரசிடம் என்டிஏ சார்பில் கேட்டுக் கொண்டுள் ளோம். எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு அரசு அனுமதி அளிக் கும்பட்சத்தில், அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் நீட் தேர்வு களுக்கு ஆதார் கட்டாயமாக்கப் படும். இவ்வாறு வினித் ஜோஷி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x