2 மாதங்களுக்குப்பின் காஷ்மீரில் முன்னேற்றம்: பரூக், உமர் அப்துல்லாவை சந்தித்த தேசிய மாநாடுக் கட்சிக் குழு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைச் சந்தித்த அவரின் கட்சியினர் : படம் ஏஎன்ஐ
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைச் சந்தித்த அவரின் கட்சியினர் : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரு மாதங்களுக்குப்பின் மிகப்பெரிய அரசியல் மற்றமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர்கள் பரூக் அப்துல்லா, அவரின் மகன் உமர் அப்துல்லாவை அவரின் கட்சியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு இன்று சந்தித்துப் பேசினார்கள்.

மாநிலத்தில் நிலவும் சூழல், அரசியல் சூழல், எதிர்வரும் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகியவை குறித்து இரு தலைவர்களுடனும் தனித்தனியாக கட்சியினர் ஆலோசனை நடத்தினார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் இருந்து வருகின்றனர். தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் ஜம்மு பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தலைவர்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விடுவித்தது.இந்நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அவரின் மகன் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச அவர்களது கட்சியின் உறுப்பினர்களுக்கு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து ஜம்மு பகுதியின் தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவர் தேவிந்தர் சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,அவரின் தந்தை பரூக் அப்துல்லாவை இன்று சந்தித்தனர்.

முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஏறக்குறைய 30 நிமிடங்கள் வரை இந்த குழுவினர் தனியாகச் சந்தித்துப் பேசினார்கள். அதன்பின் பரூக் அப்துல்லா இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து 30 நிமிடங்கள்வரை பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பின் தேவேந்தர் சிங் ராணா கூறுகையில், " எந்தவிதமான அரசியல் நடவடிக்கை தொடங்குவதாக இருந்தாலும், காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுவிக்கப்படுவது அவசியம். மக்கள் இங்கு அடைந்து கிடப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளம். எந்தவிதமான குற்றம் செய்யாமல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பது முடிவுக்கு வந்து ஜனநாயகம்மீண்டும் மலர வேண்டும்.

எங்கள் கட்சிக்கென தனிப் பாரம்பரியம், வரலாறு இருக்கிறது. தொடர்ந்து மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும், சகோதரத்துவத்துக்கவும், மாநிலநலனுக்காவும் உழைப்போம். ஜம்முவில் அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விரைவில் ஆளுநரை சந்தித்துப் பேச இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்

, பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in