

சிதாப்பூர்,
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் எதிரே புகைப்பிடித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹ்முதாபாத் நகராட்சித் தொடக்கப் பள்ளியின் வகுப்பறைக்குள்ளாகவே ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகி உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி அஜய்குமார் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
வகுப்பறைக்குள் ஓர் ஆசிரியர் புகைபிடிக்கும் வீடியோவைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில் அந்த ஆசிரியர் யார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
அதனை விசாரிக்க கல்வி அதிகாரி ஒருவரை குறிப்பிட்ட பள்ளிக்கு அனுப்பியிருந்தேன். வீடியோவில் உள்ள நபருடன் அந்த ஆசிரியரின் உருவம் பொருந்தியது உறுதியான பின்பு அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்தேன்.
வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்கள் புகைபிடிக்கக்கூடாது என்பது ஒரு புறமிருக்க, ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற வகையில் அவர்கள் புகையே பிடிக்கக் கூடாது.
இவ்வாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.
வைரலாகிய வீடியோவில், தொடக்கநிலை மாணவர்கள் நிறைந்த ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் ஒரு பீடி (கையால் சுருட்டப்பட்ட சிகரெட்) ஏற்றி புகைப்பதைக் காணமுடிகிறது.