மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: வியப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் திடீர் பாங்காக் பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர பேச்சாளர்களாக ராகுல் காந்தி இருக்கும் நிலையில், நேற்று இரவு திடீரென ராகுல் காந்தி பாங்காக் நகரம் புறப்பட்டுச் சென்றுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு பாங்காக் செல்லும் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராகுல் கந்தி புறப்பட்டுச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிலந்த் தியோராவுக்கும், சஞ்சய் நிருபத்துக்கும் வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர் நேற்றுதிடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பூபேந்திர்சிங் ஹூடாவுக்கும், தன்வருக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியதால் தன்வர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி பாங்காக் சென்றுள்ளது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாங்காக் பயணம் முடித்து ராகுல் காந்தி எப்போது தாயகம் திரும்பவார் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டன.


ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in