Published : 06 Oct 2019 10:49 AM
Last Updated : 06 Oct 2019 10:49 AM

கேரளாவை உலுக்கிய ஒரே குடும்பத்தின் 6 பேர் கொலைச் சம்பவம்: 14 ஆண்டுகளில் ஒரே மாதிரி 6 மர்மச் சாவுகள்: பிடிபட்டார் சயனைடு கொலைகாரி

சயனைடு கொலைகாரி ஜோலி ஷாஜு வடக்கர காவல்நிலையத்துக்கு வந்த போது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தயியில் 14 ஆண்டுகள் காலக்கட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சொத்துக்காக விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. கேரளாவை உலுக்கிய இந்த மர்மக்கொலைகள் சம்பவத்தில் போலீஸார் தீவிர விசாரணைக்குப் பிறகு பெண் உட்பட 3 பேரைக் கைது செய்துள்ளன.

2002 முதல் 2016 வரை சொத்துக்காக குடும்பத்தினர் ஒவ்வொருவரையாக திட்டம்போட்டு கொலை செய்தது மற்ற உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொத்துக்காக இப்படி ஒரு சதியா என்று போலீஸாரும் கேரள மக்களுமே அதிர்ச்சியில் உறைந்த சம்பவமாகும் இது.

இதில் கைது செய்யப்பட்ட 3 பேர்களில் 2 பேர் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். 14 ஆண்டுகள் ஒரே மாதிரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொன்னமட்டோம் குடும்பத்தத் தலைவரும் கல்வித்துறை அதிகாரியுமான டாம் தாமஸ் (66), இவர் மனைவி அன்னம்மா தாமஸ் (57), மகன் ராய் தாமஸ் (40), டாம் தாமஸ் சகோதரரின் மருமகள் சிலி ஷாஜு, இவரது 2 வயது மகள் அல்பைன், அன்னம்மா தாமஸின் சகோதரர் மேத்யூ மஞ்சடியில் (68) ஆகியோர் 2002 முதல் 2016 ஆண்டுகளுக்கு இடையே மர்மமான முறையில் இறந்தனர்.

ராய் தாமஸை திருமணம் செய்து கொண்ட ஜோலி தாமஸ், ராய் தாமஸ் மர்மச்சாவுக்குப் பிறகு ஷாஜு சக்காரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், சிலி என்பவர் இறந்ததையடுத்து சக்காரியாவை ஜாலி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜோலி தாமஸ் போலி உயில் தயார் செய்து குடும்பத்தின் பாதி சொத்துகளை தன் பெயருக்கு ஜோலி தாமஸ் மாற்றியதில் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில்தான் சனிக்கிழமையன்று ஜோலி தாமஸ், உறவினர் எம்.எஸ். ஷாஜி (மேத்யூ) இவரது நண்பர் பிராஜு குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

ராய் தாமஸ் மனைவியான ஜோலி தாமஸ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில் குடும்பத்தினர் அனைவரையும் விஷம் வைத்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டு அதிர்ச்சியளித்துள்ளார். மேலும் ராய் சகோதரி ராஞ்சுவையும் கொல்ல முயன்றதாகவும் தெரிவித்தார்.

சயனைடு கொலைகாரி ஜோலி தாமஸ், ராய் தாமஸ் என்பவரை 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் பி.காம் பட்டதாரி, அழகு நிலையம் ஒன்றையும் கல்வி நிலையம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

ஜோலி தாமஸ், ஷாஜி மற்றும் பிரஜு குமாரிடமிருந்து சயனைடு வாங்கி கொலைகளைச் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஷாஜி முன்னதகா ஜுவெல்லரியில் வேலைப்பார்த்தவர் அங்கு நகைகள் பாலிஷ் செய்ய பயன்படுத்தப்படும் சயனைடை ஜோலிக்கு இவர்தான் கொடுத்துள்ளார். இந்த சயனைடு விஷத்திற்கு இரையான அன்னம்மா தாமஸின் சகோதரர் மேத்யூ மஞ்சடியிலின் உறவினர்தான் ஷாஜி.

இதற்கு முன்பாக 6 சுற்று விசாரணையில் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கல்லூளி மங்குனியாக நின்ற ஜோலி தாமஸ் என்ற அந்தப் பெண் கடைசியில் போலீஸார் ஆதாரங்களுடன் வந்த போது வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டார். அதோடு தனக்கு உதவியர்களையும் போட்டுக் கொடுத்தார்.

இவர் சிக்கக் காரணமாக அமைந்தது இரண்டு விஷயங்கள்தான் என்கிறார் விசாரணை போலீஸ் அதிகாரி கே.ஜி. சைமன், ஒன்று தான் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பணியாற்றுவதாக ஜோலி தாமஸ் பொய் கூறியுள்ளார், இரண்டாவதாக குடும்பச் சொத்துக்களை அபகரிக்க போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.

மாயமான டைரி:

டாம் தாமஸும், அன்னம்மா தாமஸும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். இவர்களுக்கு ரெகுலராக டைரி எழுதும் பழக்கம் இருந்தது. இவர்களது டைரியும் மாயமாகியுள்ளது, அது கிடைத்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர்.

இவர்களது மகன் ராய் தாமஸ் முக்கம் மற்றும் தாமரசெரியில் பல தொழில்களைச் செய்து வந்தார், ஆனால் இவை எதுவும் வெற்றியடையவில்லை. அன்னம்மா தான் தன் மகன் வர்த்தகத்துக்குப் பணம் அளித்து வந்ததாக நம்பப்பட்டது ஏனெனில் டாம் தாமஸ் இறந்த போது வங்கிக் கணக்கில் ரூ.22,000 மட்டும்தான் இருந்தது. இருவரும் அரசு ஊழியர்கள் பென்ஷன்களை சேர்த்தாலே இன்னும் அதிகமான தொகையல்லவா வங்கியில் இருந்திருக்க வேண்டும் இவ்வளவு குறைந்த பணம் இருந்துள்ளதே என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்தது.

அன்னம்மா சகோதரர் மேத்யூ சாவு ஏற்படுத்திய புதிர்:

இதற்கிடையே அன்னம்மா தாமஸின் சகோதரர் 68 வயதான மேத்யூ மஞ்சடையில் மரணம் அடைந்தது போலீஸாருக்கு புரியாத புதிராக அமைந்தது.

இந்தக் குடும்பத்தின் முதல் மரணம் அன்னம்மாதான், ஆகஸ்ட் 22, 2002-ல் மட்டன் சூப்பை ருசித்த இவர் மரணமடைந்தார். வாயில் நுரைதள்ள அவர் இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கே கொண்டு வரப்பட்டார். பிறகு 2008-ல் அன்னம்மா கணவர் டாம், 2011-ல் மகன் ராய் தாமஸ் ஆகியோர் இதே பாணியில் மரணமடைந்தது பீதியை ஏற்படுத்தியது.

3 மரணங்களும் ஒரேமாதிரி இருந்ததை மேத்யூதான் முதன் முதலில் கூறினார், எனவே மேத்யூவுக்கு ஜோலி மீது சந்தேகம் விழுந்தது. ராய் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் மேத்யூதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.அப்போதுதான் சயனைடு கலப்பு விவகாரம் வெளியே வந்தது.

ஆனால் ராய் தாமஸின் பெற்றோர் அன்னம்மா, டாம் ஆகியோரது மரணங்கள் சந்தேகப்படப் படாததால் அவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக அப்போது தெரியவில்லை.

2011-ல் ராய் தாமஸ் மர்ம மரணத்தையடுத்து மேத்யூ என்பவரும் மரணமடைந்தார். இவரும் திடீரென மயங்கிச் சரிந்து இறந்தார். சம்பவதினத்தன்று மேத்யூ வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவர் திடீரென மயங்கிச் சரிந்த்தாக ஜோலிதான் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். வாயில் நுரைதள்ள மேத்யூ மரணமடைந்ததும் சந்தேகத்தை ஜோலி மீது அதிகரித்தது, ஏனெனில் ஜோலி வீடும் மேத்யூ வீடும் அருகருகில் தான் இருந்துள்ளது.

அல்பைன் மற்றும் சிலி மரணங்கள்:

டாம் சகோதரர் சகாரியாவின் மகன் ஷாஜு, இவர் சிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 வயது மகள் அல்பைன் ஷாஜு இருந்தார். இந்நிலையில் 2014 மே 3ம் தேதி குழந்தை அல்பைன் ஷாஜு பிரெட் மட்டன் கறியைச் சாப்பிட்டு இதே போல் திடீரென மயங்கிச் சரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தது குழந்தை. இந்தச் சம்பவத்தின் போதும் ஜோலி அருகில் இருந்ததையும் போலீஸார் குறித்துக்கொண்டனர்.

குழந்தையின் தாய் சிலி 2016ம் ஆண்டு இதே போல் மர்ம மரணமடைந்தார். தாமரசேரியில் இவர் ஜோலியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுள்ளார். பிறகு பல் மருத்துவரை சிலியும் கணவர் ஷாஜுவும் சென்று பார்த்துள்ளனர். ஜோலியும் உடனிருந்தார்.

சிலியின் கணவர் ஷாஜு முதலில் பல் மருத்துவர் அறைக்குள் செல்ல ஜோலி, சிலி வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது சிலி திடீரென வாயில் நுரைதள்ள ஜோலியின் மடியில் சாய்ந்துள்ளார். சிலியையும் காப்பாற்ற முடியவில்லை. சிலி இறந்து ஓராண்டுக்குப் பிறகு குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி சிலியின் கணவர் ஷாஜுவும் ஜோலியும் திருமணம் செய்து கொண்டனர். இது நடந்தது பிப்ரவரி 6, 2017.

இந்தத் திருமணமும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.

திட்டம்போட்டு சொத்துக்காக குடும்பத்தினரை ஒவ்வொருவராக ஜோலி தாமஸ் கொலை செய்து மிகப்பெரிய சயனைடு கொலைகாரியாக மாறியிருப்பதும், இவரது வாக்குமூலமும் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x