

ஸ்ரீநகர்
காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லாவை அவர்களின் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் இருந்து வருகின்றனர். தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
தற்போது அங்கு லேண்ட் லைன் இணைப்புகள் முற்றிலும் செயல்பட தொடங்கி விட்டது. மேலும் அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ஜம்மு பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தலைவர்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விடுவித்தது.
இந்நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அவரின் மகன் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச அவர்களது கட்சியின் உறுப்பினர்களுக்கு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் மான்டோ கூறுகையில், " காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து பருக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை சந்தித்து பேசுவற்காக, மாகாண தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை ஜம்முவிலிருந்து புறப்படுகின்றனர்" என தெரிவித்தார்.
.
ஏஎன்ஐ