Published : 06 Oct 2019 09:10 AM
Last Updated : 06 Oct 2019 09:10 AM

ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி

என்.மகேஷ்குமார்

திருமலை 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளினார். மாலையில் தங்க தேரோட்டமும், இரவு யானை வாகன சேவையும் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதன் 6-ம் நாளான நேற்று காலை, உற்சவரான மலையப்ப சுவாமி தங்க ஹனுமன் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற ஹனுமன் வாகன சேவையில் பல்வேறு மாநில நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலைஞர்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களின் கலைஞர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தங்க தேரோட்டம்

ஹனுமன் வாகன சேவையை தொடர்ந்து மாலையில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் தேவி, பூதேவி சமேத மாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதையடுத்து இரவில் மாட வீதிகளில் கஜ (யானை) வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று சூரிய பிரபை, சந்திர பிரபை சேவைகள் நடைபெற உள்ளன. நாளை காலை தேரோட்ட மும், இரவு குதிரை வாகன சேவை யும் நடைபெறும். 8-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

6 லட்சம் பேருக்கு அன்னதானம்

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு கருடசேவை நடைபெற்றது. இதில் ஒரு கட்டத்தில் மழை பெய்த போதிலும் பக்தர்கள் ஒரு அடி கூட அசையாமல் மாட வீதிகளில் காத்திருந்து வாகன சேவையை தரிசனம் செய்தனர்.

கருடசேவையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று கூறும்போது, “கருடசேவைக்கு காலை 7.30 மணி முதலாகவே பக்தர்களுக்கு இலவச சிற்றுண்டி, டீ, காபி மற்றும் உணவு வழங்கப்பட்டது.

சுமார் 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், மோர் போன்றவையும் வழங்கப்பட்டன. கருடசேவை நாளில் மட்டும் 6 லட்சத்து 64,094 பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 85,639 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டி யல் காணிக்கையாக பக்தர்களால் ரூ. 2.83 கோடி செலுத்தப்பட்டது. 39,607 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x