Published : 05 Oct 2019 05:30 PM
Last Updated : 05 Oct 2019 05:30 PM

போரில் உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு 4 மடங்கு இழப்பீட்டுத் தொகை: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி

போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்துக்கு தற்போது தரப்படும் இழப்பீட்டுத் தொகையை 4 மடங்கு உயர்த்தும் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன்படி ராணுவ வீரர் ஒருவர் போரின்போதோ அல்லது தீவிரவாதிகளுடன் சண்டையிடும்போது வீர மரணம் அடைந்தாலோ அல்லது 60 சதவீதத்துக்கு மேல் காயம் அடைந்தாலோ அவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆனால், இனி அந்தத் தொகை ரூ.8 லட்சம் வரை வழங்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதியில் (ஏபிசிடபிள்யுஎப்) இருந்து வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை தவிர்த்து குடும்பத்துக்கு ஓய்வூதியம், ராணுவக் குழு உயிர் காப்பீடு, ராணுவ நல நிதி உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொள்கைரீதியாக ஒப்புதல் அளித்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதியில் இருந்து ஏராளமான வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் சியாச்சின் பனிமலையில் பனிச்சரிவில் சிக்கி இறந்த 16 வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்த நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டது.

போரில் உயிரிழக்கும் வீரர்கள் நல நிதி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டபோதிலும், 2016, ஏப்ரல் மாதத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x