கொலைக் குற்றம்சாட்டப்பட்ட ஷஷி பூஷன் மேத்தாவை பாஜகவில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு

கொலைக் குற்றம்சாட்டப்பட்ட ஷஷி பூஷன் மேத்தாவை பாஜகவில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி, பிடிஐ

கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜே.எம்.எம். தலைவர் ஷஷி பூஷன் மேத்தா பாஜகவில் சேர்க்கப்பட்டதையடுத்து ராஞ்சியில் பாஜக தலைமைச் செயலகத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக ஆங்கில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளி வார்டன் சுசித்ரா மேத்தா கொலை வழக்கில் ஷஷி பூஷன் மேத்தா குற்றம் சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்து வருகிறார், அப்போது அப்பள்ளியின் இயக்குநராக இருந்தவர் ஷஷி பூஷன் மேத்தா.

இந்நிலையில் இவர் பாஜகவில் சேர்க்கப்பட்டதையடுத்து கொல்லப்பட்ட சுசித்ரா மேத்தா குடும்பத்தினர் பாஜக தலைமைச் செயலக மேடையை முற்றுகை இட்டதாகக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட சுசித்ரா மேத்தாவின் குடும்பத்தினர் பாஜக ஆதரவாளர்களாக இருந்தும் தன் தாயார் கொல்லப்பட்டதையடுத்து சுசித்ராவின் மூத்த மகன் அபிஷேக் ஆங்கில ஊடகன் ஒன்றிற்கு இது தொடர்பாகக் கூறும்போது, “எங்களுக்கு நீதி தேவை, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகதான் ஆள்கிறது. என் தாயார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை கட்சியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதுவும் இறுதித் தீர்ப்பு வெளியாகும் நேரம் இப்படிச் செய்வது சரியாக இல்லை” என்றார்.

மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அலோக் துபே கூறும்போது, “பாஜக தன்னை வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால் இப்போதோ பாலியல் வன்முறையாளர்கள், நிலக்கரி மாஃபியாக்கள், நிதிமுறைகேடு குற்றவாளிகள், சமூக விரோத சக்திகள் அனைவரையும் கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை ‘புனிதப் படுத்தி வருகிறது’”, முன்னதாக தாலு மாத்தோ, மேனேஜர் ராய் போன்றோரைச் சேர்த்தது தற்போது ஷஷி பூஷன் மேத்தாவைச் சேர்த்துள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in