ஆரே காலனி வனப்பகுதி அல்ல என்று உயர்நீதிமன்றமே தெரிவித்து விட்டது: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பேட்டி

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
Updated on
1 min read

லக்னோ,

மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி மரங்களை வெட்டுவதில் தவறில்லை; மேலும் அநத இடம் ஒரு வனப்பகுதி அல்ல என உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து சில மணி நேரங்களில் நேற்றிரவு ஆரோ காலனியில் நுழைந்த புல்டவுசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.

இதற்கு மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆரே காலனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆரே காலனியில் மரம் வெட்டப்படுவதை ஆதரித்துப் பேசியுள்ளார்.

இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி மரங்களை வெட்டுவதில் தவறில்லை; அப்பகுதி வனப்பகுதி அல்ல என உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. வனப்பகுதியை அழிப்பதுதான் தவறு, மரங்களை வெட்டுவது அல்ல.

"டெல்லியில் முதல் மெட்ரோ நிலையம் அமைப்பதற்காக 20 முதல் 25 மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது, இதற்கு மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பத்தான் செய்தது. நமக்கு வளர்ச்சிப் பணிகளும் முக்கியம்.

வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன, அதன் பின்னர் டெல்லியில் வனப்பகுதி அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து முறையும் மேம்பட்டுள்ளது இது 'விகாஸ் பீ, பரியவரன் கி சுரக்ஷா பீ' (சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி) என்ற மந்திரம் ஆகும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவத்தார்.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in