Published : 05 Oct 2019 12:41 PM
Last Updated : 05 Oct 2019 12:41 PM

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற 71 அதிகாரிகள் கடிதம்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரிகள் 4 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கவலை தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற மத்திய அரசு உயர் அதிகாரிகள் 71 பேர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் வெளிநாட்டில் இருந்து ரூ. 305 கோடி முதலீடு வருவதற்கு உதவியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றக் காவல் வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டும் நிலையில், அதிகாரிகள் யாரையும் விசாரிக்காமல் அப்போது அமைச்சராக இருந்த சிதம்பரத்தை மட்டும் சிபிஐ கைது செய்துள்ளது என்று காங்கிரஸ் தரப்பிலும், சிதம்பரம் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால், ஐஎன்எக்ஸ் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முறைகேடான வழியில் முதலீடு பெறுவதற்கு 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அப்போது இருந்த அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதில்தான் சர்ச்சை எழுந்தது. இந்தத் துறை நிதியமைச்சகத்தின் கீழ் வருகிறது

இந்த முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டாலும், ஒப்பந்தத்தை பல்வேறு செயலாளர்கள் அந்தஸ்தில் இருந்த அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரையும் விசாரிக்கவில்லை என்று சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்தபோது, நிதியமைச்சகத்தில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் 4 பேரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. சிபிஐ முடிவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 அதிகாரிகளும் தற்போது தங்கள் பணிக்காலம் முடிந்து ஓய்வில் உள்ளனர்.

குறிப்பாக, நிதிஆயோக் அமைப்பி்ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே பூஜாரி, நிதியமைச்சகத்தின் இயக்குநர் பிரபோத் சக்சேனா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் ரவிந்திரநாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில், 4 அதிகாரிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக கவலை தெரிவித்து முன்னாள் மத்திய அரசு உயரதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

குறிப்பாக இந்தக் கடிதத்தில் முன்னாள் மத்திய அரசு செயலாளர் கே.எம். சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பஞ்சாப் முன்னாள் டிஜிபி ஜூலியோ ரிபேரியோ ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் முன்னாள் அதிகாரிகள் கூறுகையில், " ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குறிப்பிட்ட அந்த 4 ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக குறிவைக்கப்படுகிறார்கள். அரசியல்ரீதியாக ஆதாயம் அடைவதற்காக அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

நாட்டுக்காக சிறப்பாகச் சேவை செய்த அதிகாரிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத சூழல் இருக்கிறது. நேர்மையான, கடினமாக உழைக்கும் அதிகாரிகளைக் குறிவைத்து தண்டனை அளித்தால் பணி செய்து கொண்டிருக்கும் அதிகாரிகளும் மனரீதியாகப் பாதிக்கப்படுவார்கள்.

அன்றைய சூழலில் இருந்த அரசின் கொள்கையைத்தான் அவர்கள் செயல்படுத்தினார்கள்.
ஒவ்வொரு முக்கியமான திட்டத்தை ஆய்வு செய்யவும், செயல்படுத்தவும் அதிகாரிகள் அதிகமான காலம் எடுத்துக் கொள்வதில் வியப்பு ஏதும் இல்லை. அதேசமயம், அவர்கள் மீது பல ஆண்டுகளுக்குப் பின் கிரிமினல் நடவடிக்கை வராது என்று சொல்வதற்கும் எந்த உறுதியும் இல்லை.

குறிப்பிட்ட அந்தநேரத்தில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீங்கள் மறுஆய்வு செய்யும்போது, அதற்கான விதிமுறைகளைக் கண்டிப்பாக வகுக்க வேண்டும். நீதி நிலை நாட்டப்படும் என்று நம்புகிறோம்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x