Published : 05 Oct 2019 12:48 PM
Last Updated : 05 Oct 2019 12:48 PM

மும்பை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்ட எதிர்ப்பு: 144 தடை; 98 பேர் கைது

மும்பை,

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அதிகாரிகள் மரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து நேற்றிரவு மாநகரத்தின் பிரதான நுரையீரலாக விளங்கும் மரங்களை வெட்டும் பணிகள் நேற்றிரவே தொடங்கப்பட்டுவிட்டன.

மரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆரே காலனி மக்கள் நேற்றிரவு மெட்ரோ கார்ஷெட் கட்டப்படவிருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 38 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

மரம் வெட்டும் பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்த அப்பகுதி மக்களில் 60 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பைக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டத் தொடங்கியதும், நூற்றுக்கணக்கான பசுமை ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தினர். இவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கையை நிறுத்த முயன்றனர். இதனால் நேற்றிரவு 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலையும் போராட்டம் நடைபெற்றது. போலீஸார் கூட்டத்தைக் கலைக்கத் தொடங்கினர். பின்னர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டியிருந்தது. இதில் 60 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆரே காலனி, கோரேகான் சோதனைச் சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிசியின் 144- வது பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் மக்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x