Published : 05 Oct 2019 11:29 AM
Last Updated : 05 Oct 2019 11:29 AM

'காஷ்மீர் நிலவரம் புரிந்து பேசுங்கள்': துருக்கி, மலேசியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் 

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் நேற்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய துருக்கி, மலேசியாவுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 74-வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த மாதம் 24 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி 27-ம் தேதி பேசினார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்தும், இந்தியா குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

அடுத்த நாட்களில் ஐ.நா.வில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது பேசுகையில், "காஷ்மீரை இந்தியா படையெடுத்து, ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும்" என பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல துருக்கி பிரதமர் எர்டோகனும், " ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் நடக்கிறது. காஷ்மீரில் 80 லட்சம் மக்கள் சிக்கி இருக்கிறார்கள். முரண்பாடுகளோடு இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும். சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளின் தலைவர்களும் காஷ்மீர் குறித்து புரிதல் இல்லாமல் பேசிய பேச்சுக்கு இந்தியா சார்பில் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவும், துருக்கியும் நட்பு நாடுகள். கடந்த மாதம் 6-ம் தேதி துருக்கி அரசு காஷ்மீர் குறித்து பேசிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். காஷ்மீர் விவகாரம் என்பது முழுக்க இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை. இதில் கருத்துகள் கூற வேண்டாம்.

காஷ்மீர் குறித்து துருக்கியின் கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை, ஒருதரப்பானவை, உறுதியற்ற தன்மை கொண்டவை. எந்தக் கருத்தைத் தெரிவிக்கும் முன்பு, சூழல் குறித்து முறையான புரிதலோடு, நிலைமை அறிந்து பேச வேண்டும் என்று துருக்கி அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல மலேசிய அரசு, இந்தியாவின் நட்பு நாடு. பாரம்பரியமாக நட்புடன் இரு நாடுகளும் இருந்து வருகின்றன, அதிலும் சமீபகாலமாக நட்புறவு பெருமளவு நெருக்கமாகி இருக்கிறது. ஐ.நா.வில் ஜம்மு காஷ்மீர் குறித்த மலேசியப் பிரதமரின் பேச்சைக் கவனித்தோம். உண்மைக்குப் புறம்பான விஷயங்களின் அடிப்படையில் பிரதமர் பேசியது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளை பாகிஸ்தானே சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள். இதில் மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை.

இந்தியாவுடனான நட்புறவை மனதில் வைத்து மலேசிய அரசு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்" எனத ராவேஷ் குமார் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x