மகாராஷ்டிராவில் இழுபறி முடிந்தது: சிவசேனா, பாஜக  இடையே தொகுதிப் பங்கீடு சுமுகம்

மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். அருகே, சிவேசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. படம் | ஏஎன்ஐ
மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். அருகே, சிவேசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. படம் | ஏஎன்ஐ
Updated on
2 min read

மும்பை

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியாக இருந்த சிவசேனா, பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்று சுமுகமாக முடிந்தது. இரு கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தன.

இதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 126 தொகுதிகளில் சிவசேனா கட்சியும், 14 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும், மீதமுள்ள 148 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு இம்மாதம் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிலும், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளாமலே வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கினர்.

இதனால் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கு இடையே பெரும் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டது. மும்பை வோர்லி தொகுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் கூட்டாக மும்பையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்து, தங்களின் கட்சி போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், "மகாரஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 126 தொகுதிகளில் சிவசேனா கட்சி போட்டியிடுகிறது. 14 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 148 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்துத்துவாவுக்கு எந்தவிதமான ஆபத்து இருந்தாலும், அதை பாஜகவும், சிவசேனாவும் சமமாகப் பகிர்ந்துகொண்டு, ஒரே கண்ணோட்டத்தில் அணுகும்" எனத் தெரிவித்தார்.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி குறித்துப் பேசிய பின்புதான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுகிறோம். இந்தத் தேர்தலிலும் பாஜக, சிவேசேனா கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.

வோரில் தொகுதியில் போட்டியிடும் ஆதித்யா தாக்கரே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். அடுத்த இரு நாட்களில் பாஜகவுக்குப் போட்டியாக இருக்கும் வேட்பாளர்களைத் திரும்பப் பெறக் கேட்டுக்கொள்வோம். கட்சி யாரையும் நீக்கவில்லை, சிலரே கட்சிப் பணிக்காக தேவை என்பதால், அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. பாஜக சார்பில் நடப்பு எம்எல்ஏவாக இருக்கும சிலருக்கும், மூத்த அமைச்சர்களுக்கும் சீட் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களின் வாரிசுகளுக்கு சீட் வழங்கவும், சிலருக்கு கட்சியில் முக்கியப் பதவிகளையும் வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in