

புதுடெல்லி
இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரமதர் இம்ரான் கான் ஐ.நா.வில் பேசியது ஆத்திரமூட்டும் பேச்சு. அவர் பொறுப்பற்ற வார்த்தைகளைப் பேசியுள்ளார் என்று மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்தது. இதில் 27-ம் தேதி பிரதமர் மோடியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசினார்கள். இதில் பிரதமர் மோடி தனது பேச்சில் பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் விவகாரம் குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உலக அளவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தினார்.
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துதான் அவரின் பேச்சில் பெரும்பகுதி இருந்தது. ''இந்தியாவும், பாகிஸ்தானும் மரபுரீதியான போர் செய்தால்கூட அது அணு ஆயுதப் போரில்தான் முடியும். உலக அளவில் உள்ள முஸ்லிம்கள் காஷ்மீருக்கு ஆதரவாகத் திரள வேண்டும், இந்தியாவுக்கு எதிராகப் புனிதப் போர் புரிய வேண்டும்" என இம்ரான் கான் தெரிவித்தார்.
இம்ரான் கானின் இந்தப் பேச்சுக்கு மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் உயர்ந்த இடத்தில், நாட்டின் தலைவர் அந்தஸ்தில் இருக்கிறார். ஐ.நா.வில் அவர் பேசிய பேச்சை இதற்குமுன் யாரும் பேசியது இல்லை. நீங்கள் அந்தப் பேச்சைக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
ஒரு நாட்டின் தலைவர் ஆத்திரமூட்டும் வகையிலும், பொறுப்பற்ற வகையிலும் பேசியுள்ளார் . இதை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது.
சர்வதேச விவகாரங்கள், உறவுகளை எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி அவருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இவ்வாறு பொறுப்புற்ற பேச்சைப் பேசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் செய்ய வாருங்கள் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது சராசரி, இயல்பான மனிதரின் குணம் அல்ல.
ஒரு அண்டை நாட்டுடன் இயல்பான நட்புறவோடு எவ்வாறு பழகுவது என்பதை அறிந்து பாகிஸ்தான் தலைவர்கள் பழக வேண்டும் என்று சொல்கிறோம். வழக்கமாக அவர்கள் இதுபோன்றவற்றைச் செய்யமாட்டார்கள்.
அவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், சிலநேரங்களில் அவர்கள் அண்டை நாடாக இருப்பதால் இதைச் சொல்கிறோம். அண்டை நாட்டின் எல்லைகளில் அத்துமீறுவது கவலை அளிக்கிறது. அந்நாட்டு பிரதமர் வகிக்கும் பதவிக்கு இதுபோன்ற செயல் பொருத்தமானது அல்ல" என ராவேஷ் குமார் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்