

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
தமது மகன் ஆதித்யா தாக்கரேவை மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் அமர வைக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இதில், தற்போதைய முதல்வரான தேவேந்திர பட்னாவிஸையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியுள்ளது.
அங்குள்ள 288 தொகுதிகளில் சிவசேனா 126, பாஜக 148 மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீதி யுள்ளவற்றில் போட்டியிடுகின்றன. இதில் கூட்டணிக் கட்சிகளின் வேட் பாளர்கள் பாஜகவின் சின்னத் திலேயே போட்டியிட சம்மதித் துள்ளனர்.
இந்நிலையில், சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வர் பதவியை கோரவும் சிவசேனா முடிவு செய் துள்ளது.
மும்பை மாநகரத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு ஓரிரு உறுப்பினர்கள் அதிகம் கிடைத்தனர். இதனால், அக்கட்சி மேயர் பதவியை பாஜகவுக்கு விட்டுத்தரவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சிவசேனா நிர்வாகி கள் வட்டாரம் கூறும்போது, "கடந்த தேர்தலில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலை இந்த மக்களவையிலும் வீசியதால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். எனவே, குறைந்த பட்சம் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் சிவசேனா வெற்றி பெற்று துணை முதல்வர் பதவியை ஆதித்யாவுக்காக கோருவோம்" எனத் தெரிவித்தனர்.
உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனான ஆதித்யா தாக்கரே, சிவசேனாவின் இளைஞர் அணி தலைவராக உள்ளார்.
இவர் தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் உறுப்பினர் ஆவார். தமது உடல்நிலை காரணமாக முக்கியப் பதவிகளில் அமர விரும்பாத உத்தவ், தனது மகன் ஆதித்யாவை முன்னிறுத்தி உள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 63, பாஜக 122, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 மற்றும் காங்கிரஸ் 42 தொகுதிகளில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது