

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் தன் மீதான எஃப்.ஐ.ஆர்-ஐ நீக்கும் படி சமூக ஆர்வலர் கவுதம் நவ்லகா தொடர்ந்திருந்த மனு மீதான விசாரணை வழக்கிலிருந்து நீதிபதிகள் ரமணா, மற்றும் சுபாஷ் ரெட்டி விலகவில்லை என்றும் அன்றைய தினம் காஷ்மீர் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைக்கான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த இரண்டு நீதிபதிகளும் அமர்ந்ததாக உச்ச நீதிமன்ற பதிவேட்டு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிபதி கவாய் என்பவர்தான் இந்த வழக்கிலிருந்து தாமாகவே விலகினார் என்று அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நவ்லகா வழக்கு விசாரணையிலிருந்து 5 நீதிபதிகள் விலகியதாக செய்திகள் வெளியாகின. செப்.30ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நவ்லகா வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார், காரணம் இவர் நவம்பர் 17ல் ஓய்வு பெறுவதாலும் அதற்கு முன்னதாக அயோத்தி வழக்குகள் மீது கவனம் செலுத்த விரும்புவதாலும் நவ்லகா வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நவ்லகா மனு மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதியன்று நீதிபதிகள் ரமணா, சுபாஷ் ரெட்டி, கவாய் அகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கை விசாரிக்க மறுப்பை கோர்ட் அறையிலேயே கவாய் தெரிவித்தார். ஆனால் அன்றைய தின முடிவில் வெளியான கோர்ட் உத்தரவில் 3 நீதிபதிகளுமே நவ்லகா வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டதாகவேத் தெரிவித்தது.
நவ்லகா வழக்கு மீண்டும் 4வது முறையாக விசாரணைக்கான பட்டியலில் இடம்பெற்ற போது அக்டோபர் 4ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியொர் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டது.
பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக செயல்பாட்டாளர் நவ்லேகா, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக ஆர்வலர்கள் அருண் பெரைரா, வெர்னன் கொன்சால்வேஸ், நவ்லேகா ஆகியோரை புனே போலீசார் கைது செய்தனர். இதில் நக்சல்கள் இயக்கத்துடன் நவ்லேகாவுக்கு தொடர்பிருப்பதாக அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட வேண்டும் என்று இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
2018, செப்டம்பரில் உச்ச நீதிமன்ற உத்தரவில் இந்தக் கைதுகள் மறுக்கும், விமர்சிக்கும் குரல்களை அடக்குவதாகாது, இவர்கள் மீது விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்ட்ரா போலீசுக்கு கோர்ட் பச்சைக் கொடி காட்டியது. சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களை வீட்டுக்காவலில் எடுக்க அனுமதியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.