Published : 04 Oct 2019 04:20 PM
Last Updated : 04 Oct 2019 04:20 PM

'சாப்பாட்ல வெங்காயம் சேக்காதீங்கன்னு சொல்லிட்டேன்': வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பேச்சு

புதுடெல்லியில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் வங்கதேச பிரதமர் ஷேக்ஹசினா பேசிய காட்சி : ஏஎன்ஐ

புதுடெல்லி

இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி நிறுத்தப்பட்ட நிலையில், உணவில் என்னுடைய அனுமதியின்றி வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சமையல்காரர்களிடம் சொல்லிவிட்டேன் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்தார்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார். இந்தியா, வங்கதேச வர்த்தக உறவு, நட்புறவு, முதலீட்டை ஈர்த்தல் உள்ளிட்டவற்றை வலுப்படுத்தும் பொருட்டு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

முதல் நாளான இன்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோரைச் சந்தித்து பிரதமர் ஷேக் ஹசினா பேச்சு நடத்தினார். இந்த கூட்டத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கேற்றார்.

நாட்டில் வெங்காயத்தின் விலை திடீரென கிலோ ரூ.80 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து வகை வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையால் இந்தியாவில் வெங்காயத்தின் விலை கனிசமாக குறைந்தது, ஆனால், ஆசிய நாடுகளி்ல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வெங்காய ஏற்றுமதியால் தான் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்டது குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

" எதற்காக திடீரென்று வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது என எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்தேன் தெரியுமா, என்னுடைய சமையல்காரரை அழைத்து, என்னுடைய அனுமதியில்லாமல் உணவில் வெங்காயத்தை சேர்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்.

இந்த முடிவு எங்களுக்கு துணை புரியும். திடீரென இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது எங்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

தெற்காசியாவிலேயே வங்கதேசம் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சுதந்திரங்களை வழங்குகிறது, சுதந்திரமான கொள்கைகளை வகுத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டை சட்டப்பூர்வமாக பாதுகாத்தல், வரிச்சலுகைகள், எந்திரங்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை, எப்போது வேண்டுமானாலும் தொழிலில் இருந்து விலகலாம் போன்ற பல்வேறு சலுகைகள் இருக்கின்றன.

100 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க முயன்று வருகிறோம். இப்போதைக்கு 12 மண்டலங்களை உருவாக்கியுள்ளோம், அவற்றை 3 நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம். இந்தியாவுக்கு மாங்கலா, பெரேமெரா, மிர்சாரி ஆகிய பகுதிகளை ஒதுக்குகிறோம், இந்திய முதலீட்டாளர்களுடன் சேர்ந்து வர்த்தகத்தை அதிகரிக்க நினைக்கிறோம். இந்தியமுதலீட்டாளர்கள் வங்கேசத்தில் தொழில் தொடங்க முன் வர வேண்டும் "

இவ்வாறு ஷேக் ஹசினா தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x