தேசம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

வயநாடு

பிரதமர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் உடனடியாக அவர்களை சிறையில் தள்ளுகிறார்கள். தேசம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளார்.

கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது முசாபர்பூர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பது குறித்து ராகுல் காந்தி இந்தக் கருத்தை தெரிவித்தார்.

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இரவு நேரத்தில் பயணிக்கத் தடை விதித்திருப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது. இதில் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியாவது:

''இந்த தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இது ரகசியம் ஒன்றும் அல்ல. இந்த உலகிற்கே தெரியும். பிரமதர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் அவர்களைச் சிறையில் தள்ளும் நிலை இருக்கிறது அல்லது தாக்கப்படுகிறார்கள். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் நடப்பது நன்றாகத் தெரிகிறது. இந்த தேசம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. இதுஒன்றும் ரகசியம் இல்லை. தெளிவாகத் தெரிகிறது.

இந்த தேசத்தில் 2 விதமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று இந்த தேசத்தை ஒரு மனிதர் ஒரு சித்தாந்தம் ஆள வேண்டும். மற்றவர்கள் வாய்மூடி இருக்கவேண்டும். மற்றொரு புறம், எதிராகப் பேசும் காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்த தேசத்தில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதில் வித்தியாசமான கோணங்கள் இருக்கின்றன. அந்தக் குரல்களை நசுக்கக்கூடாது. இதுதான் இந்த தேசத்தில் நடக்கும் போராட்டம்".

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in