Published : 04 Oct 2019 03:29 PM
Last Updated : 04 Oct 2019 03:29 PM

அக்.14 முதல் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; சட்டத்தை மீறுவதாக நிர்வாகம் எதிர்ப்பு

பெங்களூரு

இந்திய விண்வெளி பாதுகாப்புத்துறையான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹால்) நிறுவனத்தின் ஊழியர்கள் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹால்) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்திய விமானப் படைக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்களை இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் (எச்ஏஎல்) தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு (AIHALTUCC), தொடர்ந்து பல மாதங்களாக ஊதியத் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

இதற்கு நிர்வாகம் சரியான பதில் அளிக்க முன்வரவில்லை என்றும் ஊதியத் திருத்தப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாணப்படவில்லை என்றும் எச்ஏஎல் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்து ஊழியர்களின் கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 14-ம் தேதி முதல் 9 இடங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க ஊழியர்களின் இந்தப் போராட்டத்தை ஹிந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் லிமிடெட் (ஹால்) கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து இன்று ஹிந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் லிமிடெட் (ஹால்) வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''இந்திய எச்ஏஎல் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு (AIHALTUCC) காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. நாட்டின் 9 நகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 26ல் எச்ஏஎல்லின் அனைத்து தொழிற்சங்கங்களின் குழு முன்வைத்த கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதன் அடிப்படையில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பைக் கோரினோம். இவை யாவும் யதார்த்தமான மற்றும் மிகச் சாதாரணமான எதிர்பார்ப்புகளே ஆகும்.

தொழிற்சங்கங்கள் ஒழுங்கிணைப்புக் குழு ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் இத்தகைய ஊழியர்களின் போராட்டத்தின் வரம்பு என்ன என்பதைக்கூட உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும், பொதுநிறுவனங்கள் துறை (டிபிஇ) வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றை உணராமல் தொழிற்சங்கங்களின் ஒழுங்கிணைப்புக்குழு செயல்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்கள் முன்மொழியப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தம் அமைப்பின் நலனுக்காகவோ அல்லது ஊழியர்கள் நலனை முன்னிறுத்தக்கூடியதாகவோ இல்லை.

ஒருபுறம் நம்பத்தகாத மற்றும் நீடிக்க முடியாத கோரிக்கைகளுக்கு இணங்க, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை மீறுகிறது. இன்னொரு புறம் இந்தப் போராட்டங்களினால் நிறுவனத்தின் போட்டித்தன்மை பாதிக்கப்படும்.

தற்போதுள்ள சட்டரீதியான விதிகளுக்கு ஏற்ப, முன்மொழியப்பட்ட வேலை நிறுத்தம் சட்டவிரோத வேலைநிறுத்தத்திற்குச் சமமாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்தப் போராட்டத்தினால் தொழிலாளர்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளை இழக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்''.

இவ்வாறு ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹால்) தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x