Published : 04 Oct 2019 01:16 PM
Last Updated : 04 Oct 2019 01:16 PM

வயநாட்டில் இரவு நேர  போக்குவரத்து தடை: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; ராகுல் காந்தி பங்கேற்பு

சுல்தான் பத்தேரி

வயநாட்டில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

கேரள மாநிலம் வயநாடு வழியாக செல்லும் 766 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில்இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை மைசூருடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை வழியாக பந்திபூர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

இதையடுத்து வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில், இந்தத் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு மாற்றாக குட்டா கோனிகுப்பா சாலை போடப்பட்டுள்ளது.

சுல்தான் பத்தேரி முதல் மைசூர் இடையிலான தூரம் 98 கிலோ மீட்டர் மட்டுமே. ஆனால், இந்த தேசிய நெடுஞ் சாலைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு மாற்று சாலையில் சென்றால் 217கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

இதனால் வயநாடு மாவட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தடையை நீக்ககோரி சுல்தான் பத்தேரியில் இளைஞர்கள் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ‘‘மக்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். மாற்றுப்பாதை சரியான முறையில் ஏற்படுத்தப்படாமல் போக்குவரத்து தடை செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் சட்டப் பேராட்டம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தேவையான சட்ட உதவிகள் வழங்குவோம்’’ எனக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை ராகுல் காந்தி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x