Published : 04 Oct 2019 12:41 PM
Last Updated : 04 Oct 2019 12:41 PM

இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்

முசாபர்பூர்

கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஹாரில் உள்ள முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்ய காந்த் திவாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சதார் போலீஸ் நிலையத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், கடந்த ஜூலை 23--ம் தேதி இயக்குநர் மணிரத்னம், திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல பெங்கால் திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர்.

அந்தக் கடிதத்தில், " எங்கள் அன்பான நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வரு கின்றன. அவற்றைப் பார்க்கும் போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்துக் கொல்வதை உட னடியாக கண்டிப்பாக நிறுத்த வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

அதேபோல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடை பெறுகின்றன. இவற்றைத் தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது பிரதமர் அவர்களே. அந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கடிதத்துக்கு எதிராக பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், " 50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவதுபோன்று இருக்கிறது. ஆதலால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி இருந்தார்".

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம்தேதி முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்ய காந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x