மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவு: பிரச்சாரம் செய்ய சஞ்சய் நிருபம் மறுப்பு

சஞ்சய் நிருபம்- கோப்புப் படம்
சஞ்சய் நிருபம்- கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை
மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க போவதில்லை என மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக மற்றும் சிவசேனாவில் இணைந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கட்சி தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சி பணிகளில் இருந்து ஒதுக்கி வருகின்றனர். இதனால் காங்கிரஸூக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க போவதில்லை என மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சி நடக்கும் சம்பவங்கள் என்னை வருத்தமடைய செய்துள்ளன. கட்சி தலைமை எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது. அதேசமயம் கட்சியை விட்டு விலகுவதற்கான சூழல் இன்னமும் எழுவில்லை.

நான் பரிந்துரை செய்தவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பரிந்துரைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டனர். பிரச்சாரத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே தெரிவித்து விட்டேன்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in