

லக்னோ
உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் 63 குழந்தைகள் பலியான விவகாரத்தில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட மருத்துவர் கபீல்கான் மீது புதிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருத்துவர் கபீல்கான் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், இவரை விசாரணை நடத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கபீல்கான் குற்றமற்றவர் என அறிக்கை அளிக்கப்பட்டது.
63 குழந்தைகள் ஆக்ஸிஜன் இன்றி பலியானதற்கும் மருத்துவர் கபீல்கானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, அந்த வார்டுக்கு இவர் பொறுப்பாளரும் இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதற்கும், பணம் செலுத்தாமல் இருந்ததற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடைய 63 குழந்தைகள் பலியான விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கபீல்கான், மருத்துவர் பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். குற்றமற்றவர் என்ற அறிக்கை வெளியானதால், கபீல்கான் மனநிறைவு அடைந்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவர் கபீல்கான் மீது புதிய குற்றச்சாட்டுகளின் கீழ் துறைரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவருக்கு இன்னும் நற்சான்று வழங்கவில்லை என்றும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர் கபீல்கான் மீது ஒழுங்கீனமாக நடத்தல், ஊழல், பணி நேரத்தில் கவனக்குறைவாக இருத்தல், அரசுக்கு எதிராக நடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக மருத்துக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜ்னீஷ் துபே கூறுகையில், "மருத்துவர் கபீல்கான் மீது 7 புதிய குற்றச்சாட்டுகளின் கீழ் துறைரீதியான விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் இருந்து கான் முழுமையாக விடுவிக்கப்படவி்லலை. சமூக ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் செய்துள்ளார். இடைநீக்கத்தி்ன் போது அரசுக்கு எதிராக பல்வேறு ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.
துறைரீதியாக 4 வழக்குகளில் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டு தனியாக கிளினிக் நடத்தியுள்ளார். இடைநீக்கத்தில் இருந்தபோது மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து சிகிச்சை அளித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்