Published : 04 Oct 2019 11:05 AM
Last Updated : 04 Oct 2019 11:05 AM

மகாராஷ்டிர தேர்தல்: மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மகளை எதிர்த்து போட்டியிடும் கட்ஸே

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏக்நாத் கட்ஸே, தனது மகளை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் வழங்க டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மற்ற தொகுதிகளில் ஒரு சிலவற்றில் கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கவும், 144 தொகுதிகளில் பாஜக போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கோதூர்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர்களான ஏக்நாத் கட்ஸே மற்றும் வினோத் ஆவ்டே ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.

ஏக்நத் கட்ஸே 1991-ம் ஆண்டில் இருந்து முக்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளார். பாஜக அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அவர் நிலபேர ஊழல் புகாரில் அவர் 2016-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அவருக்கு தற்போது தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகள் ரோஹிணி கட்ஸே பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து வந்துள்ள கட்ஸே பாஜகவில் பலம் பொருந்திய தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்தார்.

முதல்வர் தேவந்திர பட்னவிஸை விடவும் மூத்த தலைவரான அவர் பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது மகள் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை.

இதுபோலவே வினோத் ஆவ்டேயும் பாஜகவின் மகாராஷ்டிர மாநில தலைவராக பதவி வகித்தவர். அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக மீண்டும் தேர்தலில் போட்டியிட போரிவெலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x