

புதுடெல்லி
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக பொறுப்பேற்றது. புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களிலேயே முத்தலாக் தடை சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. எனினும், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர்களாக மொத்தம் 58 பேர் பதவி வகித்து வருகின்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் மற்றவர்கள் இணையமைச்சர்களாகவும் உள்ளனர். புதிய அரசு பதவியேற்றபோது கடந்தமுறை வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சிவசேனாவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறி பிறகு அமைச்சரான சுரேஷ் பிரபு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் தேர்தல் சமயத்தில் பாஜவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என கூறப்பட்டது.
ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடும் நோக்கில் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பொருளாதார சுணக்கத்தை தீர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி அதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு தொழில் மற்றும் வர்த்தகத்துறையை சுரேஷ் பிரபு வசம் ஒப்படைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 2-ம் முறை பதவியேற்ற பிறகு முதன் முறையாக மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபோலவே நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் போன்றவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் மறைவுக்கு பிறகு ஊடகங்களில் உரையாற்றவும், அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும் ரவிசங்கர் பிரசாத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடி விரும்புவாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தி வேறு சிலர் மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஏஎன்எஸ்