

மும்பை
ஏற்றுமதிக்குத் தடை, இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்தல் போன்ற தொடர் நடவடிக்கைகளால் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 30 ரூபாயாக நாசல்கான் மொத்தச்சந்தையில் இன்று சரிந்தது.
குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆகவும் கொள்முதல் விலையாக ரூ.26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.30க்கு விற்பனையானது.
கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே வெங்காயத்தை உரிக்காமல் மக்களின் கண்ணில் கண்ணீர் வந்தது. கிலோ ரூ.20க்கு விற்பனையான வெங்காயம் திடீரென ரூ.80 வரை எட்டியது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படும் மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்தது.
இதனால், மகாராஷ்டிராவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மொத்தச்சந்தையான நாசல்கான் சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்தது. நாசல்கான் சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் எதிரொலித்து, வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதன் காரணாக மற்ற நகரங்களிலும் வெங்காயத்தின் விலை எகிறத் தொடங்கியது.
கிலோ ரூ.25 முதல் 30 வரை சில்லறை விலையில் விற்பனையாகிய பெரிய வெங்காயம் அடுத்த ஒரு வாரத்தில் கிலோ ரூ.80 ஆக அதிகரிக்கத்தது. இதையடுத்து, மத்திய அரசு தன்னிடம் இருந்த இருப்பில் இருந்து வெங்காயத்தைக் குறைந்த விலைக்கு மக்களுக்காக விற்பனை செய்தது.
வெங்காயத்தின் விலை சில்லறையில் ரூ.70 முதல் ரூ.80 வரை இருந்தபோது, மத்திய அரசு நியாய விலைக் கடைகள், கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ ரூ.22க்கு வெங்காயத்தை விற்பனை செய்தது.
தேசிய கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு (நாபெட்), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்), மதர்டெய்ரி ஆகியவை மூலம் கிலோ ரூ.23.90க்கு வெங்காயம் விற்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வெங்காய ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை அதிகரித்தது. இதன் காரணமாக வெங்காய ஏற்றுமதி குறையத் தொடங்கியது. இருந்தும் விலை குறையாததையடுத்து, அனைத்து வகையான வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இருப்பு வைப்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன் காரணமாக வெங்காயத்தின் விலை நாசல்கான் மொத்தச் சந்தையில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பருவமழையும் முடிந்ததால், வெங்காயத்தின் வரத்தும் அதிகரிக்கத் தொடங்கியது இதனால், நாசல்கான் மொத்தச் சந்தையில் இன்று பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 30 ரூபாயாகவும் குறைந்தபட்சமாக ரூ.15 ஆகவும் சரிந்தது. .
பிடிஐ