

புதுடெல்லி
ப.சிதம்பரத்துக்கு சிறையில் வழங்கப்படும் உணவு அவருக்கு பழக்கமில்லை, அதனால் அவர் 4 கிலோ எடை குறைந்து விட்டார் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் விசாரித்த நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.
ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் கடந்த 19-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.
இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்து மனு மீது கடந்த சில தினங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 30ம- தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
சிதம்பரம் சாட்சிகளை சீர்குலைத்து விடுவார் என நம்புவதற்கு இடமில்லை, எனினும் அவர் வெளியே வந்தால் அதன் தாக்கம் சாட்சிகளிடம் இருக்கவே செய்யும் என நீதிமன்றம் கூறியது.
இந்தநிலையில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிதம்பரத்துக்கு 74 வயதாகிறது. அவரது உடல்நிலை குழந்தையின் உடல்நிலையை போல பலவீனமாக உள்ளது. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு வழங்கப்படும் உணவு அவருக்கு பழக்கமானதாக இல்லை.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் அவரது உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. சிபிஐயிடம் விசாரணை கைதியாகவும், நீதிமன்றத்தில் விசாரணை கைதியாகவும், அவர் 42 நாட்கள் இருந்துள்ளார். விசாரணைக்கு தேவையான நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார்.
இதற்கு மேலும் விசாரணைக்காக அவர் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை. அதுபோலவே விசாரணையின்போது போதுமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இதற்கு மேலும் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது தண்டனையாக அமைந்து விடும்.
இவ்வாறு என சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.