

புதுடெல்லி
பாபர் மசூதியின் அடியில் மிகப்பெரிய கட்டடம் இருந்ததற்கான சந்தேகத்துக்கு இடமில்லாத சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் அந்த கட்டடம் கோயில் தான் என உச்ச நீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கில் ராம் லல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார்.
அயோத்தி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு வழக்கை விசாரிக்கிறது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசிய மாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையை தீர்த் துக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ராம் லல்லா சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி தனது வாதங்களை வைத்தார். இஸ்லாமிய தரப்பினர் வைத்த வாதங்களுக்கு எதிர்வாதங்களை முன் வைத்தார். அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் வாதாடியவர்கள் முதலில் எந்த இடத்தில் எந்த கட்டடமும் இல்லை என்றார்கள். பிறகு அது முழுமையான மசூதி தான் எனக் கூறினர். ஆனால் எங்களை பொறுத்தவரையில் இந்து கோயில் இடிக்கப்பட்டு அதன் கட்டுமானத்தின் மீது தான் மசூதி கட்டப்பட்டுள்ளது.
தொல்லியல்துறை அகழ்வாய்வுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளன. பாபர் மசூதிக்கு கீழே மிகப்பெரிய கட்டடம் இருந்துள்ளது. இதனை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே இதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த பகுதியில் இருந்தது கோயில் தான் என தொல்லியல்துறை உறுதியாக கூறவில்லை என முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெரிவித்தார். ஆனால் அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதியில் இருந்து தூண்கள், உட்பகுதி சுவர்கள், புனித பொருட்கள், கோபுர அமைப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது எல்லாம் அந்த கட்டடம் கோயில் தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே தான் இந்துக்கள் தரப்பில் அந்த கட்டடம் கோயில் தான் என உறுதியாக கூறுகிறோம்’’ என வைத்தியநாதன் தெரிவித்தார்.