பாகிஸ்தானிலிருந்து வரும் துப்பாக்கி குண்டுகள்: எல்லையோரப் பகுதிகளில் நடுக்கத்துடன் வாழும் காஷ்மீர் மக்கள்

காஷ்மீர் ஹிரா செக்டரின் எல்லையோரப் பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி அளித்த பேட்டி | படம்: ஏஎன்ஐ
காஷ்மீர் ஹிரா செக்டரின் எல்லையோரப் பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி அளித்த பேட்டி | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

கதுவா

பாகிஸ்தானில் இருந்து அடிக்கடி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால், அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக காஷ்மீர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த விதிமுறைகளை மீறி காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் அப்பகுதியில் வாழும் மக்கள் நிம்மதியோடு வாழ முடியவில்லை என்றும் அடிக்கடி தலைமீது தோட்டாக்கள் பட்டுத் தெறிக்கின்றன என்றும் காஷ்மீர் வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹிராநகர் செக்டரின் உள்ளூர்வாசி பீம்லா என்பவர் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''கடந்த 15 நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. எல்லையைத் தாண்டி வரும் கடும் துப்பாக்கி குண்டுகளுக்கிடையே நாங்கள் அச்சத்துடன் வாழ்கிறோம்.

நேற்றிரவு துப்பாக்கிச் சூடு காரணமாக, எங்கள் ஆட்டுத் தொழுவம் தீப்பிடித்தது. விலங்குகளை மீட்க மற்ற உள்ளூர் மக்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. நாங்கள் தீயணைப்பு நிலையத்தையும் அழைக்க வேண்டியிருந்தது. எங்கள் தலையைக் கடந்து பல முறை தோட்டாக்கள் பாய்ந்து செல்கின்றன.

நாங்கள் எங்கள் குடும்பங்களை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சாதாரண வாழ்க்கையை நடத்துவது கடினமாக உள்ளது. உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, எங்களுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. வேறு எந்த அதிகாரிகளும் இப் பகுதிக்கு வருவதை நாங்கள் காணவில்லை''.

இவ்வாறு பீம்லா தெரிவித்தார்.

மேலும் ஹிரா பகுதியின் அரசு நிர்வாகம் எல்லையோர மக்களைக் கண்டுகொள்வதில்லை என்பதை அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி அன்று, ஷாஹ்பூர் மற்றும் பூஞ்சின் கெர்னி செக்டரில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்குள்ள ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in