Published : 03 Oct 2019 12:06 PM
Last Updated : 03 Oct 2019 12:06 PM

மகாராஷ்டிர தேர்தல்: பாஜக கூட்டணியில் சோட்டா ராஜன் சகோதரர் போட்டி

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சி சார்பில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரினர்.

இதனால் இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் வழங்க டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மற்ற தொகுதிகளில் ஒரு சிலவற்றில் கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கவும், 144 தொகுதிகளில் பாஜக போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிடும் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கோதூர்டு தொகுதியில் போட்டியிடுகிார் அதுபோலவே சிவசேனா போட்டியிடும் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

உத்தவ் தாக்ரேயின் மகன் ஆதித்ய தாக்ரே வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். தாக்ரே குடும்பத்தில் இருந்து முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிக்கு பாஜக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டுள்ளார்.

(சோட்டா ராஜன்- கோப்புபு் படம்)

பால்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அத்வாலே கூறுகையில் ‘‘சோட்டா ராஜனின் சகோதரர் நீண்டகாலமாகவே எங்கள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அதனால் தான் அவருக்கு சீட் வழங்கியுள்ளோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x