

புதுடெல்லி
மத்தியில் ஆளும் அரசில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் இருக்கிறதா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான. ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசத்தின் அரசியல் விவகாரங்களில் நேரடியாக கருத்து தெரிவிக்க இயலாத சூழலிலும், சிதம்பரம் அவ்வப்போது தனது குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இன்று தனது கருத்துகளை குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் ட்விட்டரி்ல் கூறுகையில், " என் சார்பில் எனது குடும்பத்தினரை ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிடக் கேட்டிருக்கிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடத் தொடங்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். இந்த அரசில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இருக்கிறதா?
சமத்துவம் என்பது தொலைதூரக் கனவாக இருக்கிறது. இந்தியர்களுக்கு இடையே சமத்துவமின்மை வளர்ந்து வருகிறது. எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. சுதந்திரம் எனும் சுடர் வாரந்தோறும் நடுங்கிக்கொண்டே எரிகிறது. தொடர்ந்து அந்த சுடர் ஒளிவீசுமா அல்லது மரணிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் " எனத் தெரிவித்துள்ளார்.