34 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டார்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது: விமானத்தின் பிற பாகங்களும் விரைவில் மீட்கப்படும் என தகவல்

34 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டார்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது: விமானத்தின் பிற பாகங்களும் விரைவில் மீட்கப்படும் என தகவல்
Updated on
2 min read

காணாமல் போன இந்தியக் கடலோர காவல் படை விமானத் தின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட சில பாகங்கள் 34 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிச்சாவரம் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் பிற பாகங்களும் விரைவில் கண்டெடுக்கப்படும் என தெரிகிறது.

சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ ரக சிறிய விமானம் கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணிக்காக சென்றது. சிதம்பரம் அருகே 16 கடல் மைல் தொலைவில் பறந்து சென்றபோது இரவு 9.23 மணிக்கு திருச்சியில் உள்ள ரேடார் கண்காணிப்பு கருவியில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் காணாமல்போனது குறித்த தகவல் இரவு 10.45 மணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு கிடைத்தது. இதையடுத்து, உடனடி யாக தேடுதல் வேட்டை தொடங் கப்பட்டது. விமானம் காணாமல் போன இடம் சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும், கடலூரில் இருந்து 27 கடல் மைல் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 32 கடல் மைல் தொலைவிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழி காட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய மூவர் இருந்தனர். ஜெர்மனி யில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல்களும் கடற்படையைச் சேர்ந்த 4 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் பணியில் ஈடுபடுத்தப் பட்டது.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் கருப்புப் பெட்டி, குரல் பதிவு கருவி ஆகியவை ஒலிம்பிக் கேன்யான் கப்பலின் உதவியுடன், கடற்படை யின் சிந்துத்வஜ் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. பிச்சாவரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ள பரங்கிப்பேட்டையில் 950 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை (கிழக்கு) ஐ.ஜி. சர்மா தெரிவித்தார்.

களிமண் நிறைந்த பகுதியில் கருப்புப் பெட்டி சிக்கியிருப்பதாக வும், விமானத்தின் பிற பாகங்களும் இப்பகுதியில் சிக்கியிருப்பதால் அவற்றை மீட்க காலதாமதம் ஏற்படும் என்றும் தெரிகிறது.

குடும்பத்தினர் கருத்து

இதுகுறித்து விமானி வித்யாசாகர் குடும்பத்தினரிடம் கேட்டபோது, ‘‘தகவல் தெரிந்ததும் உடனடியாக கடலோர காவல் படை அலுவலகத்துக்கு சென்றோம். அங்கிருந்த அதிகாரிகள், விமானத்தின் உடைந்த பாகங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றபடி வேறு எந்த தகவலும் தெரியவில்லை. வேறு ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்கிறோம் என கூறியதையடுத்து நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்” என்றனர்.எம்.கே.சோனி குடும்பத்தினர் கூறும்போது, ‘‘விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டு பிடித்துவிட்டதாக தகவல் வந்தது. இது தொடர்பான எந்த தகவலையும் கடலோர காவல் படை அதிகாரிகள் எங்களிடம் தெரிவிக்க வில்லை. அதனால் நாங்களும் அதிகாரிகளை சந்திக்க செல்லவில்லை” என்றனர்.

சுபாஷ் சுரேஷ் குடும்பத்தி னரிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் மனவேதனையில் இருக்கிறோம். எதுவும் பேசும் நிலையில் இல்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in