

புதுடெல்லி
மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா எனும் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அந்தத் திட்டத்தின் பெரும்பாலான நோக்கங்கள் நிறைவேறிவிட்ட நிலையில் ஸ்வச் பாரத் 2.0 (தூய்மை இந்தியா இயக்கம் 2.0) விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான இன்று நாட்டை திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நாடு என்று அறிவிக்க மத்திய அரசு தீவிரமாகி வருகிறது. அதேநேரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தையும் தொடங்கிவிட்டது.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பீட்டில் 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நாடாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஸ்வச் பாரத் 2.0 இயக்கத்தின் முக்கிய நோக்கம், திடக்கழிவு மேலாண்மை, கழிவுரை நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்குப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்களைக் கையாளுதல் போன்றவை பிரதான நோக்கங்களாகும்.
இந்த ஸ்வச் பாரத் 2.0 இயக்கம் எப்போது தொடங்கப்படும், பிரச்சாரம் எப்போது தொடங்கும் என்பது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. ஆனால், ஸ்வச்பாரத் இயக்கம் 2.0 அல்லது திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நாடு (ஓடிஎப்)திட்டம் மிக விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இத்திட்டத்துக்கான அனைத்துப் பணிகளும் நடந்து வருகின்றன. யுனிசெஃப் அமைப்புடன் சேர்ந்து கடந்த 12 மாதங்களாக அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து, மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதலீடும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதுகுறித்து ஸ்வச் பாரத் இயக்கத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தில் பிரச்சாரம் செய்யப்படும். மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து தெரியவைத்து, அவர்களின் பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டுவருவது நோக்கமாகும்" எனத் தெரிவித்தார்.
யுனிசெஃப் இந்தியாவின், சுகாதாரப் பிரிவு நிகோலஸ் ஓஸ்பெர்ட் கூறுகையில், "கடந்த 12 மாதங்களாக ஸ்வச் பாரத் இயக்கத்துக்காக இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஸ்வச் பாரத் இயக்கத்துக்கு அடுத்ததாக என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவது குறித்து எங்கள் திட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாததாக மாற்றுவது, கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்