

லக்னோ
பாஜக முதலில் காந்தி காட்டிய உண்மை வழியில் நடக்கட்டும். அதன்பின் மகாத்மா காந்தி குறித்துப் பேசட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பாத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் 3 கி.மீ. அளவுக்கு நடந்த பாத யாத்திரைக்கு ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.
உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில் ஷாகீத் சம்பார்க் பகுதியில் இருந்து ஜிபிஓ பூங்கா வரை இன்று காங்கிகரஸ் கட்சி சார்பில் நடந்த அமைதி பாத யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். இந்த அமைதி பாத யாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அமைதி பாத யாத்திரை தொடங்கும் முன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " முதலில் மகாத்மா காந்தி உலகிற்குக் காட்டிய உண்மை வழியில் பாஜகவினர் நடக்கட்டும், அதன்பின் மகாத்மா காந்தி குறித்து அவர்கள் பேசட்டும்.
பெண்களுக்கு எதிராக ஏராளமான அட்டூழியங்கள், கொடுமைகள் நடக்கின்றன. அந்தக் குற்றங்களைச் செய்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போராடினால், போராட்டம் நடத்துபவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக நாங்கள் நிச்சயம் போராடுவோம்" எனத் தெரிவித்தார்.
அகிலேஷ் யாதவ் தாக்கு
சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோவில் இன்று மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளையொட்டி பாத யாத்திரை நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், " மகாத்மா காந்தியின் பாதையான உண்மை, அகிம்சை, சமூக ஒற்றுமை ஆகியவற்றின்படி நடக்காதவர்கள், காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
பாஜகவும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் காந்தியின் சிந்தனைகளில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறார்கள். தேசப்பிதா காட்டிய உண்மையான பாதையில் அவர்கள் ஒருபோதும் நடக்கமாட்டார்கள். அவர்கள் லோகியா, அம்பேத்கர், சுவாமி விவேகானந்தா ஆகியோரை ஏற்க விரும்புகிறார்கள். வன்முறை மீது நம்பிக்கை இருக்கும் ஒரு கட்சி, இன்று காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ