

எம்.சண்முகம்
புதுடெல்லி
நாட்டின் பரபரப்பான வழக்கு களில் ஒன்றான அயோத்தி நில விவகார வழக்கு கடந்த 35 நாட் களாக தொடர்ந்து விசாரிக்கப் பட்டு வருகிறது. மூத்த வழக்கறி ஞர்களின் அனல் பறக்கும் வாத பிரதிவாதங்கள் உச்ச நீதிமன்றத் துக்கே சவாலாக உள்ளது.
நாட்டின் அரசியல், பொது மேடை, பத்திரிகை, ஊடகங்கள், மக்கள் மன்றங்கள் என அதிக இடங் களில் விவாதிக்கப்பட்ட விவகாரம் அயோத்தி விவகாரம். இதில் சர்ச் சைக்குரிய நிலம் யாருக்குச் சொந் தம் என்ற வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விரிவாக விசாரிக் கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் தற்போது நாட்டின் உயர்ந்த அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் அதிக நேரத்தை எடுத்துக் கொண் டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திர சூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக தினந்தோறும் விசாரிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு, விசா ரணை 35 நாட்களைக் கடந்துள்ளது.
இதுவரை நடந்துள்ள விசா ரணையில் வழக்கு எந்தப் பக்கம் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கத் தொடங் கியபோது, இந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் கே.பராசரன், ‘ராமர் பிறந்த இடம்’ என்பதை ஒரு சட்டப்பூர்வ நபராக கருதி வழக்கை விசாரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில ளித்து வாதங்களை முன்வைத்தார்.
‘வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புரா ணத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்து மத நம்பிக்கையின்படி சூரியன், மரம், ஆறு ஆகியவை கூட புனிதமானவையாகவும், கடவுளாக வும் மதிக்கப்படுகின்றன. இவற்றை சட்டப்பூர்வ நபராக கருத முடியும் என்று ஏற்கெனவே தீர்ப்புகள் வழங் கப்பட்டுள்ளன. ‘ராமர் பிறந்த இடம்’ என்பதே கடவுளுக்குச் சமமானது தான். அதற்கு உருவம் தேவை யில்லை. இந்து நம்பிக்கையில் உரு வம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்துக்கு கேதார் நாத்தை சொல்லலாம். எனவே, ராமர் பிறந்த இடத்தை பங்கு போட முடியாது’ என்று வாதிட்டார்.
இந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறி ஞர் சி.எஸ்.வைத்தியநாதன், கிழக் கிந்திய கம்பெனியைச் சேர்ந்த வில்லியம் ஃபிஞ்ச், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கை, உள்ளூர் மக்கள் அளித் துள்ள சாட்சியங்கள் ஆகியவற்றை சான்றாக காட்டி வாதிட்டார். ‘1856 முதல் 1934 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அங்கு இந்துக்கள் வழி பாடு நடத்த தடை செய்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லை. அதன் பிறகு தான் இருதரப்பினரும் சர்ச் சைக்குரிய இடத்தில் வழிபட்டுள்ள னர். கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் அங்கு சிலை வைக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை. அந்த இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்து கோயில் இருந்துள்ளது என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை கூறியுள்ளது. அதை இடித்து விட்டுத் தான் பின்னர் வந்த முகலாய அரசர்கள் மசூதி கட்டியுள்ளனர்’ என்று வாதிட்டார்.
முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், மீனாட்சி அரோரா போன்றோர் வாதிடுகையில், ராமர் அந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் காட்ட வில்லை. முகலாய அரசர் அவுரங்க சீப் (1618 1707) காலத்தில் இந்து கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டினார் என்ற இந்து அமைப்புகளின் வாதத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. பாபர் உத்தர வின் பேரில் மீர் பாகி என்பவர் தான் மசூதியைக் கட்டினார் என்று வாதிட்டனர். அக்பர்நாமா, பாபர் நாமா, யுவான் சுவாங் குறிப்பு களையும் சுட்டிக் காட்டினர். தொல் பொருள் ஆய்வுத்துறை அறிக்கை என்பது அறிவியல் அல்ல. அது வெறும் கருத்து, ஆலோசனை, அனுமானம் மட்டுமே. அதை ஆதாரமாக கருத முடியாது என்றும் வாதிட்டனர். அப்படியே அதை வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் சர்ச்சைக்குரிய இடத்தில் பூமிக்கடி யில் உள்ள அமைப்பு ஏன் புத்த மதம் அல்லது ஜைன மதத்தைச் சேர்ந்ததாக இருக்கக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
கடந்த வார கடைசி நாள் வாதத்தின்போது கருத்து தெரி வித்த நீதிபதி பாப்தே, ‘இரு தரப் பிலும் வலுவான நேரடி ஆதாரங் கள் இல்லாதபோது, எந்த அனு மானம் நம்பக்கூடியதாக இருக்கி றதோ அதை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிப்பதைத் தவிர, நீதிமன் றத்துக்கு வேறு வழியில்லை’ என்று தெரிவித்தார். நீதிபதி பாப் தேவின் கருத்து, இந்த வழக்கு நகரும் போக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அவர் மறை முகமாக சுட்டிக் காட்டியுள்ளார் என்றே கூறப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதியுடன் ஓய்வுபெற இருப்ப தால், தீர்ப்பளிக்க வசதியாக அக்டோபர் 18-க்குள் வாதங்களை முடிக்க உத்தரவிட்டுள்ளார். இன் னும் மூன்று வார விசாரணையில் வழக்கின் போக்கில் ஏதாவது புதிய திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு என்ன?
இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கோரும் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மூன்று அமைப்புகளுமே ஏற்றுக் கொள்ளவில்லை. இவை உட்பட 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.