

மும்பை
நாட்டின் பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து மீட்க மத்திய அரசு விரும்பினால், விரும்பத்தகாத உண்மைகளைக் கேட்கும் மனநிலையை பிரமதர் மோடி வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு தங்களின் பொருளாதார வல்லுநர்களை மிரட்டும் போக்கையும் நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
"நாட்டின் பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து மீட்க விரும்பினால் முதலில் பிரதமர் மோடி விரும்பத்தகாத உண்மைகளைக் கேட்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு தன்னுடைய பொருளாதார வல்லுநர்களை அச்சுறுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியின் அரசில் வெகுசிலரே தனித்துச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் நேருக்கு நேர் எந்தவிதமான குறைகளையும் கூற பிரதமர் மோடி ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், அந்த மனநிலையை பிரதமர் மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு மத்திய அரசு கடந்த முறை கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ரிசர்வ் வங்கி, நிதியமைச்சர் முறையாகச் செயல்படாததும் காரணங்களாகும். அதுமட்டுமல்லாமல் வெறுப்பை வரவழைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது பொருளாதாரச் சீர்குலைவுக்குக் காரணம்.
உயர்வான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதாரக் கொள்கைகளை இன்னும் அரசு புரிந்து கொள்ளவில்லை. இன்றுள்ள சூழலில் நமது பொருளாதாரத்துக்கு குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகாலத் திட்டங்களுக்கான கொள்கைகள் அவசியம் .
ஆனால், அந்தக் கொள்கைகள் அரசிடம் இல்லை. பிரதமரிடம் பொருளாதார வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு அச்சப்படுவது எனக்குப் பயமாக இருக்கிறது.
பிரதமர் மோடி எப்போதும் சிறு திட்டங்களில்தான் கவனம் செலுத்துகிறார். கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இலவச சமையல் கேஸ் அடுப்பு உஜ்வாலா திட்டத்தில் வழங்குவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். உண்மையில் பொருளாதாரத்துக்குப் பன்முக அளவில் அணுகுமுறை அவசியமாகும்.
நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் பொருளாதாரத்தில் வல்லுநராக இருக்கவேண்டியது அவசியம் இல்லை. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், கடந்த 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதையை வைத்துதான் செய்தார்.
சிறந்த பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் தான் தான் நிதியமைச்சராக இருந்தபோது செய்த சீர்திருத்தங்களை பிரதமராக இருந்தபோது செய்ய முடியவில்லை. 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு 95 சதவீதம் காரணம் நரசிம்ம ராவ்தான். அவருக்கு பாரத ரத்னா வழங்கிட வேண்டும்.
ப.சிதம்பரத்தைப் பொறுத்தவரை எனக்குத் தெரிந்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தோல்வி அடைந்த மாணவர்தான்.
நான் அடிக்கடி சொல்வதெல்லாம் வருமான வரியை ரத்து செய்யுங்கள். இதன் மூலம் மக்களின் சேமிப்பு பெருகும். அதிகமாக செலவு செய்வார்கள். வரிமோசடியுடன் கூடிய ஊழலைக் குறைக்கும். பணக்காரர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். பொருளாதாரத்தை அதிகமாக நகர்த்திச் செல்வதில், நுகர்வதில் நடுத்தர மக்கள் முக்கியமானவர்களாக இருந்தாலும், அவர்கள்தான் அதிகமான வரியைச் சுமக்கிறார்கள்".
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பிடிஐ