Published : 01 Oct 2019 02:48 PM
Last Updated : 01 Oct 2019 02:48 PM

அரசியலமைப்பின் 370-வது பிரிவுக்கு எதிரான வழக்கு; மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மனுதாரர்களின் புகாருக்கு அடுத்த 4 வாரங்களுக்குள் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எம்.எல் சர்மா எனும் வழக்கறிஞர்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும், சஜாத் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, தனிமனிதர்கள் என பலரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த அரசியல் சாசன அமர்வில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் இடம் பெற்றனர். காஷ்மீர் தொடர்பான மனுக்கள், 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு எதிரான மனுக்கள் என காஷ்மீர் தொடர்பான அனைத்து மனுக்களையும் இந்த அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மூத்த நீதிபதி என். ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த ஆகியோர் கூறுகையில், "இந்த வழக்கில் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் பதில் மனுத்தாக்கல் செய்தால்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். இல்லாவிட்டால் எதையும் முடிவு செய்ய முடியாது" என்றனர்.

இதற்குப் பதிலாக மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், " 2 வாரங்களுக்குள் மத்திய அரசையும், ஜம்மு காஷ்மீர் அரசையும் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் அதற்கு மேல் அவகாசம் தரக்கூடாது" என்று வாதிட்டார்.

ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினர்.

இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் பதில் மனுத்தாக்கல் செய்யப் போதுமான கால அவகாசம் வழங்குதல் அவசியம். அப்போதுதான் விசாரணை நடக்க ஏதுவாக இருக்கும். ஆதலால் அடுத்த 4 வாரங்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகமும், மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் பதில் மனுத்தாக்கல் செய்த அடுத்த வாரத்துக்குள் மனுதாரர்கள் பதில் அளிக்கலாம்.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து ரிட் மனுக்கள் தாக்கல் செய்வது நடக்கிறது. இதற்கு முன் தாக்கல் செய்தது போதும், இனிமேல் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். வழக்கை வரும் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x