Published : 01 Oct 2019 02:40 PM
Last Updated : 01 Oct 2019 02:40 PM

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; நாக்பூரில் பட்னவிஸ் போட்டி

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு அதிகமான இடம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்து இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன.

122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் கடந்த மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரினர்.

இதனால் இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் வழங்க டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் நேற்று அறிவித்தார். எனினும் தொகுதி எண்ணிகை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிடும் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் கூறியதாவது:
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பாஜகவின் முதல்கட்டவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய எம்எல்ஏக்கள் 12 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கோதூர்டு தொகுதியில் போட்டியிடுகிார்’’ எனத் தெரிவித்தார்.

சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. மீதமுள்ள 164 தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கி விட்டு மற்றவற்றில் பாஜக போட்டியிடும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x